இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த ‛பிரம்மாண்ட நாயகன்' இயக்குனர் ஷங்கர்

தினமலர்  தினமலர்
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த ‛பிரம்மாண்ட நாயகன் இயக்குனர் ஷங்கர்

இந்திய சினிமாவின் ‛ஸ்டீபன் ஸ்பீல்பர்க்' என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். தனது ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி ரசிகர்களை வியப்படைய செய்தவர். ஜென்டில்மேன் தொடங்கி 2.0 வரை அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு வித பிரம்மாண்டம் இருக்கும். படத்தின் காட்சிகளாகட்டும், பாடல்கள் ஆகட்டும் ஒவ்வொரு பிரேமிலும் ஷங்கரின் கற்பனையும், பிரம்மாண்டமும் கண்டிப்பாக இடம்பெறும். அதோடு தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக கருத்தையும் வலியுறுத்துவார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் எப்படி பிரம்மாண்ட இயக்குனராக மாறினார் என்பதை பார்க்கலாம்.



1963ம் ஆண்டு ஆக., 17ம் தேதி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர், டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். சினிமா மீது உள்ள ஆசையால் ஒரு நடிகனாக வர வேண்டும் என எண்ணியே சினிமாவிற்குள் வந்துள்ளார். ஓரிரு படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தார். இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். "ஜெய் ஷிவ் ஷங்கர்" என்ற ஹிந்தி படத்தின் மூலம் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக தனது முதல் பணியைத் தொடங்கினார். அதன்பின் இயக்குநர் பவித்ரன் இயக்கிய "சூரியன்" படத்தில் அவருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

பிரம்மாண்ட இயக்குநர், புதுமையை விரும்பும் இயக்குநர் என எல்லோராலும் அறியப்படும் ஷங்கர், 1993ம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த "ஜென்டில்மேன்" படத்தின் வாயிலாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். அந்தக் காலகட்டத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்றும் பேசப்பட்டது. தனது முதல் படத்திலேயே நல்ல பெயரும், ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களும் வர, தனது அடுத்த படமான "காதலன்" திரைப்படத்தில் "நடனப் புயல்" பிரபுதேவாவை நாயகனாக்கி, தன் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இயக்கினார். இத்திரைப்படம் இவருக்கு மட்டுமல்லாமல் நடிகர் பிரபுதேவாவிற்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.



இதனைத் தொடர்ந்து "இந்தியன்", "ஜீன்ஸ்", "முதல்வன்", "பாய்ஸ்", "அந்நியன்", "சிவாஜி", "எந்திரன்", "நண்பன்", "ஐ", மற்றும் "2.0" என இவரது அனைத்துப் படங்களுமே பிரமாண்டத்தின் உச்சம் தொட்ட திரைப்படங்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

50 மில்லியனில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் இன்று 2 பில்லியன் கொண்டு படமெடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் துறை சார்ந்த இவரது அறிவு, பிரமாண்டம், இவரது படங்களில் எடுத்துரைக்கும் சமூகமாற்றக் கருத்துக்கள் இவை எல்லாம் சேர்ந்து தான் ஷங்கரை பிரமாண்ட இயக்குநராக அடையாளப்படுத்துகின்றன.



"எஸ் பிக்சர்ஸ்" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து பல படங்களை தயாரித்தும் வெற்றி கண்டவர். ரஜினி, கமல், பிரபுதேவா, விக்ரம், அர்ஜுன் என அனைத்து முன்னணி நாயகர்களும் இவரது இயக்கத்தில் நடித்துள்ளனர். தற்போது ராம் சரணை வைத்து ஒரு படத்தையும், நின்று போன கமலின் "இந்தியன் 2" படத்தையும் இயக்குகிறார். இவரது வாரிசான அதிதி தற்போது நாயகியாக சினிமாவில் களமிறங்கி உள்ளார். முதல்படமாக விருமன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

மூலக்கதை