22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினகரன்  தினகரன்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: 22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத்தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற 22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஆக.8ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமலுக்கு மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி, ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி, என மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 80 லட்சமும், மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக சத்தியனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியும், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.40 லட்சமும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக ரூ.51 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 91 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக ரூ.35 லட்சத்திற்கான காசோலையும், இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

மூலக்கதை