கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!

தினகரன்  தினகரன்
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!

நைரோபி: கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான ரெய்லா ஒடிங்கா 2%வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். துணையாதிபராக இருந்த ரூட்டோ அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள கேபேரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயன்றனர். முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். போராட்டத்தை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மறுபுறத்தில் ரூட்டோவின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். நைரோபி நகரம் முழுவதும் ரூட்டோவின் ஆதரவாளர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூலக்கதை