வாஷிங்டன் சுந்தர் காயம்: ஜிம்பாப்வே தொடரில் சந்தேகம் | ஆகஸ்ட் 11, 2022

தினமலர்  தினமலர்
வாஷிங்டன் சுந்தர் காயம்: ஜிம்பாப்வே தொடரில் சந்தேகம் | ஆகஸ்ட் 11, 2022

புதுடில்லி: தோள்பட்டை பகுதியில் காயமடைந்துள்ள இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர், ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர் 22. தமிழகத்தை சேர்ந்த இவர், இதுவரை 4 டெஸ்ட், 4 ஒருநாள், 31 சர்வதேச ‘டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக, கடந்த பிப். 11ல் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு (ஆக. 18, 20, 22) தேர்வு செய்யப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கவுன்டி டிவிசன்–1 தொடருக்கான 2 முதல் தர போட்டியில் 8 விக்கெட் சாய்த்த இவர், ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் 3 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் விளையாடினார்.

 

மான்செஸ்டரில் நடந்த வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது கீழே விழுந்த வாஷிங்டன் சுந்தரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ‘பெவிலியன்’ திரும்பினார். இவரது காயத்தின் தன்மையை பொறுத்து ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்பார்.

 

துரத்தும் காயம்: வாஷிங்டன் சுந்தரை காயம் துரத்துகிறது. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 2வது பாதியில் கை விரலில் காயமடைந்த இவர், ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு, விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணிக்காக விளையாடிய இவர், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் பங்கேற்ற இவர், ‘டி–20’ தொடரில் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., தொடரில் கையில் காயமடைந்த இவர், 9 போட்டியில் மட்டும் விளையாடினார்.

மூலக்கதை