கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின்... கடும் எச்சரிக்கை!

தினமலர்  தினமலர்
கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின்... கடும் எச்சரிக்கை!

சென்னை :தமிழகத்தில் பெருகியுள்ள போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னையில் நேற்று நடந்த கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்தார். மாவட்டங்களில் போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணை போனால், அவர்களுக்கு எதிராக 'சர்வாதிகாரியாக மாறுவேன்'
என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மருந்து பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். அது பரவுவதை, விற்பனையாவதை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பயன்படுத்துவோரை மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதிதாக ஒருவர் கூட, போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல், இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். இந்த உறுதியை, மாவட்ட கலெக்டர்கள்,
எஸ்.பி.,க்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிலும் வளரும் தமிழகம், போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்து விடக் கூடாது; வளர விட்டுவிடவும் கூடாது. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் என்பது, கூட்டு நடவடிக்கை. போதைப் பொருள் பழக்கம் என்பது, ஒரு சமூக தீமை. இதை அனைவரும் சேர்ந்து தடுத்தாக வேண்டும். போதை மருந்து பயன்படுத்துபவர், அதில் இருந்து விடுபட வேண்டும். விடுபட்டவர் போதை பயன்பாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, போதைப் பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள், போதைப் பொருளை விற்க மாட்டேன் என, உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருட்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், தன் எல்லைக்குள் இப்பொருளின் நடமாட்டத்தை தடுத்தாக வேண்டும். போதைப் பொருள் விற்போர் அனைவரையும், காவல் துறை கைது செய்தாக வேண்டும். அவர்களின் மொத்த சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை, சமூக நல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும். போதையில் இருந்து மீள்பவர்களுக்கு, மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகாரிகளுக்கு முதல்வர் கூறிய ஆலோசனைகள்:



* ஒவ்வொரு மாவட்டத்திலும், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., பதவி உருவாக்கப்படும்

* அண்டை மாநிலங்களில் இருந்து, கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்டை மாநில காவல் துறை ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம்

* தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவாரப் பகுதிகள், மறைவான இடங்கள், பொது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில், கஞ்சா பயிரிட வாய்ப்புள்ளது. எனவே, மலையை ஒட்டியிருக்கும் வேளாண் நிலங்களில், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்

* சாதாரண பயணியர், 'கூரியர்' வழியாக, போதைப் பொருள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. பயணியர் பஸ்கள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும்

* கடலோர மாவட்டங்களில், கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்

* ஆயத்தீர்வைத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, புலனாய்வுத் துறை, சுங்கத் துறை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

* போதைப் பொருள் தயாரிக்கும் முக்கிய நபர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும்

* ஒவ்வொரு மாவட்டத்திலும், போதைப் பொருள் அதிகம் விற்கும் இடங்களை பட்டியலிட்டு, கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்

* கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் வார்டன்களை அழைத்து பேசி, அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்

* பொது மக்கள் மற்றும் மாணவர்கள், ரகசிய தகவல்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்

* போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்
படுத்த வேண்டும்.

காவல் துறையில் இருப்போர், ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள் நடமாட்டத்துக்கு, எந்த விதத்திலும் துணை போகக் கூடாது. 'இவர், 'சாப்ட்' முதல்வர்' என்று யாரும் கருதி விட வேண்டாம். நேர்மையானவர்களுக்கு தான் சாப்ட்; தவறு செய்வோருக்கு சர்வாதிகாரி.
தமிழகத்திற்குள் போதைப் பொருள் அறவே கூடாது. அந்த இலக்கை நோக்கி, அனைவரும் நடைபோடுவோம். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

புதிய அறிவிப்புகள்



* மதுவிலக்கு அமலாக்கப் பிரிவோடு, போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு இணைக்கப்படும். அதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும்

* போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க, தற்போது 12 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இனி, இரு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக அமைக்கப்படும்

* போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தனியாக, 'ஒரு சைபர் பிரிவு' உருவாக்கப்படும்

* போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுடன் இணைக்கப்படுவதால், மதுவிலக்கு பிரிவில் உள்ள மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும்.


''தமிழகத்தின் தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க், சட்டம் - ஒழுங்கு குற்ற செயல்களை தடுத்தல் மட்டுமின்றி, போதைப் பொருட்கள் தடுப்பிலும், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரைப் போல இதர மண்டலங்களில் உள்ள அதிகாரிகளும், உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும்,'' என, முதல்வர் தெரிவித்தார்.


சென்னை :தமிழகத்தில் பெருகியுள்ள போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னையில் நேற்று நடந்த கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை