காமன்வெல்த் விளையாட்டு நிறைவு; இந்தியா 4வது இடம் பிடித்தது

தினகரன்  தினகரன்
காமன்வெல்த் விளையாட்டு நிறைவு; இந்தியா 4வது இடம் பிடித்தது

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய அணி 22 தங்கம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்று 4வது இடம் பிடித்தது. பர்மிங்காமில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா உள்பட மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 20 வகை விளையாட்டுகளின் 280 பிரிவுகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் 217 பேர் 16 விளையாட்டுகளில் பங்கேற்று பதக்க வேட்டை நடத்தினர். 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் தொடரில் இந்தியா 66 பதக்கங்களுடன் (26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் பிடித்த நிலையில், இம்முறை அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தியா அதிக பதக்கங்களைக் குவிக்க வாய்ப்புள்ள துப்பாக்கிசுடுதல் போட்டி பர்மிங்காம் தொடரில் இடம் பெறாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. எனினும், இந்திய வீரர், வீராங்கனைகள் பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், ஹாக்கி, ஸ்குவாஷ் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்தனர். பர்மிங்காம் காமன்வெல்த் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசதியது. பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன்.

மூலக்கதை