சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு

தினகரன்  தினகரன்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (ஃபிடே) துணை தலைவராக 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சதுரங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு ஆர்கடி டிவோர்கோவிச் மீண்டும் போட்டியிட்டார். இவரை, எதிர்த்து உக்ரேனிய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்ரி பரிஸ்போலெட்ஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பச்சர் குவாட்லி ஆகியோர் போட்டியிட்டனர். தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன் பச்சர் குவாட்லி மனுவை வாபஸ் பெற்றார். சீனா, ரஷ்யா, பெலாரஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவில்லை. நேற்று நடந்த தேர்தலில் 157 வாக்குகள் பெற்று ரஷ்யாவின் ஆர்கடி டிவோர்கோவிச் 2வது முறையாக ஃபிடே தலைவராக வெற்றி பெற்றார். 16 வாக்குகள் பெற்று உக்ரேனிய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்ரி பரிஸ்போலெட்ஸ் தோல்வியை தழுவினார். மேலும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஆனந்துக்கு பிரகாசமாக உள்ளதாகவும் செஸ் கூட்டமைப்பினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வாக்கெடுப்புக்கு முன் பேசிய ஃபிடே தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச், ‘ஆம், நான் ரஷ்யன் தான். ரஷ்ய செஸ் கூட்டமைப்பு வாரியத்தின் தலைவராக ரஷ்ய சதுரங்க சமூகம் உட்பட எனது நாட்டு மக்களுக்கு சேவை செய்துள்ளேன். நான் அதை தொழில் ரீதியாகவும், மிக உயர்ந்த நேர்மையுடன் செய்ய முயற்சித்து வருகிறேன். உக்ரைனில், நடந்த சோக நிகழ்வுகள் மற்றும் ஃபிடேவில் ரஷ்யாவின் ஈடுபாட்டைக் குறைப்பது தொடர்பான ஃபிடே கவுன்சிலின் முடிவுகளை ஆதரித்ததில் நான் வலுவான நிலைப்பாட்டை எடுத்தேன். இந்தாண்டு, ரஷ்யாவில் நடக்க இருந்த இந்த செஸ் போட்டியானது, வேறு இடத்தில் நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்’ என்றார்.

மூலக்கதை