மத அமைப்புகள், தொண்டு நிறுவன விடுதி அறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

தினகரன்  தினகரன்
மத அமைப்புகள், தொண்டு நிறுவன விடுதி அறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

புதுடெல்லி: ‘மத அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளின் அறைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தொடர்கிறது,’ என ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து ஓட்டல்கள், விடுதிகளில் தினசரி கட்டணம் ரூ.1000க்கு உட்பட்ட அறைகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதம் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சீக்கியர்களின் ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் அமைப்பு நடத்தும் விடுதிகளில் ரூ.1000 தினசரி வாடகை கொண்ட அறைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இதனால், சீக்கியர்கள் பாதிக்கப்படுவதாகவும், மத அமைப்புகள் நடத்தும் விடுதிகளில் அறை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ஆம் ஆத்மியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.இது தொடர்பாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தனது டிவிட்டரில் நேற்று அளித்த விளக்கத்தில், ‘மத அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் அவற்றின் வளாகத்திலும், பிற இடங்களிலும் நடத்தும் ஓய்வறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அவைகளுக்கான ஜிஎஸ்டி விலக்கு எப்போதும் போல் தொடரும்’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை