மெக்சிகோவில் 50 சீக்கியர் தலைப்பாகைகள் பறிமுதல்: விசாரணைக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
மெக்சிகோவில் 50 சீக்கியர் தலைப்பாகைகள் பறிமுதல்: விசாரணைக்கு உத்தரவு

வாஷிங்டன்: அகதிகளாக தஞ்சமடைய வந்து மெக்சிகோ எல்லையில் பிடிப்பட்ட 50 சீக்கியர்களிடம் தலைப்பாகையை அகற்றி, பறிமுதல் செய்த விவகாரத்தில் அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் தஞ்சம் தேடி கடந்த ஜூன் மாதம் அகதிகளாக வந்த சீக்கியர்கள் 50 பேரை மெக்சிகோ எல்லையில் உள்ள யூமா பகுதியில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அப்போது, அவர்களின் தலைப்பாகைகளை பாதுகாப்பு படையினர் அகற்ற கூறியதாகவும், அவற்றை பறிமுதல் செய்ததாகவும் செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து அமெரிக்க மனித உரிமைகள் சங்கம், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைக்கு புகார் அளித்தது. இதையடுத்து, இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கிறிஸ் மேக்னஸ் கூறும் போது, ``சுங்கம் மற்றும் பாதுகாப்பு ரோந்து படையினர் எல்லையில் பிடிபடும் அனைவரையும் சமமாகவே நடத்துகின்றனர். இது குறித்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

மூலக்கதை