சூரியகுமார் அதிரடியில் இந்தியா முன்னிலை

தினகரன்  தினகரன்
சூரியகுமார் அதிரடியில் இந்தியா முன்னிலை

செயின்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள  இந்தியா  முதலில் விளையாடிய ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்று 1-1 என சமநிலை வகித்த நிலையில், 3வது போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடந்தது.  டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. அந்த அணியின் கைல் மேயர்ஸ் 73 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். பாவெல் 23, கேப்டன் பூரன் 22, கிங், ஹெட்மயர் தலா 20 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர் 2, ஹர்திக், அர்ஷ்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித் 11 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். அதன் பிறகு இணை சேர்ந்த ஷ்ரேயாஸ் - சூரியகுமார் இருவரும்  முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தனர்.  அமர்க்களமாக விளையாடிய சூரியகுமார் 76 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து வென்றது.  ரிஷப் 33 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஹூடா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா  2-1 என்ற கணக்கில் மீணடும் முன்னிலை பெற்றது. முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் நடந்து முடிந்துள்ளன. எஞ்சிய 2 ஆட்டங்கள் ஆக. 6, 7 தேதிகளில்  அமெரிக்காவின் புளோரிடா  மாகாணத்தில்  நடக்க உள்ளன.2வது இடத்துக்கு முன்னேறிய ‘ஸ்கை’இந்திய அணி அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் (31 வயது) தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார். ‘ஸ்கை’ (SKY) என செல்லமாக அழைக்கப்படும் அவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த 3வது டி20ல் அதிரடியாக 76 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்நிலையில், டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் சூரியகுமார் 816 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (794), தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் (788) இருவரும் ஒரு இடம் பின்தங்கி 3வது, 4வது இடத்தில் உள்ளனர். பாக். கேப்டன் பாபர் ஆஸம் (818) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

மூலக்கதை