44வது செஸ் ஒலிம்பியாட்: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு...! டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

தினகரன்  தினகரன்
44வது செஸ் ஒலிம்பியாட்: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு...! டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தகவல். போட்டி நடைபெறும் இரு அரங்கையும் நேற்று பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத் துறையின் கடற்கரை கோயில் சிலை, செஸ் போர்டு மற்றும் காயின், தமிழக கோயில்களின் சிறப்புகள் அடங்கிய புத்தகங்களும், செஸ் கூட்டமைப்பு சார்பில் டீ சர்ட், தொப்பி, பை ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு கூறியதாவது: செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் தங்கும் விடுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். போட்டி நடைபெறும் ரிசார்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணித்து வருகிறோம். கடற்கரை பகுதிகள், மாமல்லபுரத்தை சுற்றிலும் 10 புறக்காவல் நிலையம் அமைத்தும், காவலர்கள் சீருடை இல்லாமலும் மறைமுகமாக கண்காணித்து வருகின்றனர். 186, நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்களுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் 100 உயிர் காக்கும் வீரர்கள் மற்றும் மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க வரும் வீரர், வீராங்கனைகளுக்கும் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படும். செஸ் வீரர்களுக்கு கால்பந்து போட்டிசெஸ் ஒலம்பியாட் போட்டிக்கு இன்று ஓய்வு நாள். அதன் தொடர்ச்சியாக போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோருக்கு இடையிலான காட்சி கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய கூட்டமைப்பு, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என 6 அணிகள் ஏ, பி, பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆட்டமும் தலா 13 நிமிடங்கள் கொண்ட 2 பகுதியாக நடைபெறும். 4 நிமிட இடைவேளையும் உண்டு. போட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும்.மாணவிகளுக்கு செஸ் யோகா!நெய்வேலி டவுன்சிப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளை சேர்ந்த செஸ் பயிற்சி பெறும் மாணவிகள் 40 பேர் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பள்ளி நிர்வாகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள், அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்த்துவிட்டு, அங்குள்ள புல்வெளி மைதானத்திற்கு வந்தனர். அங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குழு உறுப்பினரும், சிங்கப்பூர் செஸ் யோகா மாஸ்டருமான டின்ஜானா (56) என்பவர், பள்ளி மாணவிகளை ஆர்வமுடன் அழைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செஸ் போர்டு மையத்தில் செஸ் காயின்களை வைத்து யோகா பயிற்சி அளித்தார். ராஜா, ராணி, குதிரை, சிப்பாய் உள்ளிட்ட செஸ் காயின்களை கையில் எடுத்து, அதன் நகர்வுகள் மூலம் பயிற்சி அளித்த அவர், மாணவிகளுக்கு செஸ் யோகா பற்றிய விளக்கங்களை ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் சொல்லிக் கொடுத்தார். மாணவிகள் அதை ஆர்வமுடன் கூர்ந்து கவனித்தனர். ஒலிம்பியாட் குழு உறுப்பினராக உள்ள டின்ஜானா, சிங்கப்பூரில் உள்ள சில பள்ளிகளில் பகுதிநேரமாக இலவச செஸ் யோகாவும் கற்றுக்கொடுக்கிறார். மாமல்லபுரத்தில் அவர் தாமாகவே முன்வந்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்ததை அங்கிருந்த அனைவரும் பார்த்து ரசித்து பாராட்டினர்.

மூலக்கதை