44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கார்ல்சன் வெற்றி

தினகரன்  தினகரன்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கார்ல்சன் வெற்றி

நார்வே அணிக்காக களமிறங்கி உள்ள உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், 5வது சுற்றில் நேற்று ஜாம்பியாவின் ஜில்லன் பவால்யாவுடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன் 26 நகர்த்தல்களில் வெற்றியை வசப்படுத்தி 1 புள்ளியை தட்டிச் சென்றார். ஏற்கனவே விளையாடிய 3 சுற்றுகளில் அவர் உருகுவே மற்றும் மங்கோலிய வீரர்களை வீழ்த்திய நிலையில், இத்தாலியின் வொகாசுரோ டேனியலுக்கு எதிராக டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.* நாளை ஓய்வு நாள்!கடந்த மாதம் 29ந் தேதி தொடங்கி மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை 5 சுற்றுகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நாளை ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீரர், வீராங்கனைகள் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.* ஹாங்காங் தமிழன்!தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் தண்ணீர்மலை கண்ணப்பன்  (10 வயது). இவர் செஸ் ஒலிம்பியாடில் ஹாங்காங் நாட்டுக்காக களமிறங்கி உள்ளார். தனது 5வது சுற்றில் நேற்று நியூசிலாந்து அணியின் ஜான் ஸ்டார்க்குடன் மோதினார். * வயிற்று வலியால் வீராங்கனை அவதிசெஸ் ஒலிம்பியாடில், 2வது அரங்கில் நேற்று நடந்த 5 வது சுற்று போட்டி ஒன்றில் கென்யாவை சேர்ந்த சாஷா மோங்கேலி, நைஜிரீயாவின் எம்மானுல்லா டிரஸ்ட் மோதினர். இந்த போட்டியின்போது, 3வது நகர்வை மேற்கொண்ட மோங்கேலி தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக நடுவரிடம் கூறினார். இதையடுத்து, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், மருத்துவ உபகரணங்கள் மூலம் முழு உடல் பரிசோதனை செய்து முதலுவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, 15 நிமிடங்கள் கழித்து அந்தப் பெண் பழையபடி விளையாடத் தொடங்கினார். இந்த சம்பவத்தால் அரங்கில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.* தொடர்ச்சியாக 5 வெற்றி... குகேஷ் மகிழ்ச்சிநடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடி வரும் தமிழக வீரர் குகேஷ் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைக் குவித்து அசத்தியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:5வது சுற்றில் ஸ்பெயின் அணியை சேர்ந்த அலெக்சி ஷிரோவுடன் மோதி வெற்றி பெற்றேன். இது, எனக்கு தொடர்ச்சியாக 5வது வெற்றியாகும். நான், எதிர்கொண்ட ஸ்பெயின் வீரர் ஆக்ரோஷமான வீரர் ஆவார். அதுவும், தரவரிசையில் முன்னிலையில் இருப்பவர். திறமையான வீரர். நான் விளையாடும் போது வெற்றி பெறுவதில் முழு கவனம் செலுத்தினேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டோம். மேலும், செஸ் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். எங்கள் அணியை உலக சாம்பியன் கார்ல்சன் உற்று கவனித்து வருகிறார். அவருடன் விளையாடும் வாய்ப்பு வந்தால் விளையாடுவேன். தொடர்ச்சியாக 5 வெற்றியால் உடனடி தரவரிசையில் 3வது இடம் பிடித்துள்ளது செய்தியாளர்கள் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. இவ்வாறு குகேஷ் கூறினார். * பிரக்ஞானந்தா அதிர்ச்சி!ஓபன் பிரிவில் ஸ்பெயின் அணியுடன் நேற்று மோதிய இந்தியா-2 அணி 2.5க்கு 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இந்திய வீரர்கள் குகேஷ், அதிபன் இருவரும் தங்களுடன் மோதிய ஸ்பெயின் வீரர்களை வீழ்த்தி 1 புள்ளி பெற்ற நிலையில், ஆன்டன் டேவிட் உடன் மோதிய சரின் நிஹல் டிரா செய்து அரை புள்ளிகள் பெற்றார். எனினும், சான்டோஸ் லடாசா ஜெய்மியை எதிர்கொண்ட நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா 85 நகர்த்தல்களில் கடுமையாகப் போராடி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார்.* ராட்சத செஸ் போர்டுசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், நடுவர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், போட்டி நடக்கும் ரிசார்ட்டின் புல்வெளியில் பிரமாண்ட செஸ் போர்டு வடிமைக்கப்பட்டு, ராட்சத காய்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் நேற்று பிரமாண்ட செஸ் போர்டில் ராட்சத காயின்கள் மூலம் உற்சாகமாக விளையாடியதுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.* கலை நிகழ்ச்சிகள் கோலகலம்செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தவும், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை விளக்கும் வகையில், ஆகஸ்ட் 2, 5, 6 தேதிகளில் சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து, போட்டி நடக்கும் ரிசார்ட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பிரமாண்ட மேடை அமைத்து, நேற்று இரவு 8 மணிக்கு துடும்பாட்டம், பம்பையாட்டம், நாட்டிய சங்கமம், கிராமிய கலை, லைட்ஸ் கேமரா டான்ஸ், லைட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வீரர், வீராங்கனைைகள், உறவினர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்களை தமிழக அரசு உற்சாகப்படுத்தியது. நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், செஸ் கூட்டமைப்பு செயலாளர் பரத் சிங் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை