இந்திய அணியில் பாண்ட்யா * இங்கிலாந்து தொடரில் இடம் | ஜூலை 01, 2022

தினமலர்  தினமலர்
இந்திய அணியில் பாண்ட்யா * இங்கிலாந்து தொடரில் இடம் | ஜூலை 01, 2022

புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ‘டி–20’ தொடர் ஜூலை 7, 9, 10ல் சவுத்தாம்ப்டன், பர்மிங்காம், நாட்டிங்காமில் நடக்கவுள்ளன. ஒருநாள் தொடர் ஜூலை 12, 14, 17ல் ஓவல், லார்ட்ஸ், மான்செஸ்டரில் நடக்கும்.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்பினார். மற்றபடி அயர்லாந்து தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள், முதல் ‘டி–20’ ல் பங்கேற்பர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் முடிந்த பிறகு, கோஹ்லி, ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட், பும்ரா, ஜடேஜா உள்ளிட்டோர் கடைசி இரு ‘டி–20’ போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதனால் ருதுராஜ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ், ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங் முதல் ‘டி–20’ல் மட்டும் பங்கேற்பர்.

பாண்ட்யா வருகை

ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணிக்காக அதிக விக்கெட் சாய்த்த முகமது ஷமிக்கு (20 விக்.,), ‘டி–20’ தொடரில் ஓய்வு தரப்பட்டுள்ளது. சமீபத்திய ‘டி–20’ ல் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். ஷிகர் தவான், ஷர்துல் தாகூரும் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, 18 மாதத்துக்குப் பின் ஒருநாள் அணியில் இடம் பெற்றார்.

முதல் ‘டி–20’: ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ், சாம்சன், சூர்யகுமார், தீபக் ஹூடா, திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ், சகால், அக்சர் படேல், பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

2, 3வது ‘டி–20’: முதல் போட்டியில் பங்கேற்கும் ருதுராஜ், சாம்சன், திரிபாதி, வெங்கடேஷ், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதில் கோஹ்லி, ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட், பும்ரா, ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

ஒருநாள் அணி: ரோகித் சர்மா(கேப்டன்), தவான், இஷான் கிஷான், கோஹ்லி, சூர்யகுமார், ஸ்ரேயாஸ், ரிஷாப், பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், சகால், அக்சர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஷமி, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

மூலக்கதை