ஆஸ்திரேலியா கலக்கல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம் | ஜூலை 01, 2022

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியா கலக்கல் வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம் | ஜூலை 01, 2022

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 212 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 313/8 ரன் எடுத்திருந்தது. கம்மின்ஸ் (26), லியான் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் (26), மிட்சல் ஸ்வெப்சன் (1) ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 321 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. லியான் (15) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கையின் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

‘சுழல்’ வேட்டை: பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு, ஆஸ்திரேலிய ‘சுழல்’ வீரர்கள் தொல்லை தந்தனர். மிட்சல் ஸ்வெப்சன் பந்தில் பதும் நிசங்கா (14), ஒஷாடா பெர்ணான்டோ (12) அவுட்டாகினர். நாதன் லியான் ‘சுழலில்’ கேப்டன் திமுத் கருணாரத்னே (23), குசால் மெண்டிஸ் (8), நிரோஷன் டிக்வெல்லா (3), ரமேஷ் மெண்டிஸ் (0) சிக்கினர். டிராவிஸ் ஹெட் பந்தில் தனஞ்செயா டி சில்வா (11), தினேஷ் சண்டிமால் (13), ஜெப்ரி வான்டர்சே (8), லசித் எம்பல்டேனியா (0) சரணடைந்தனர்.

 

இலங்கை அணி 2வது இன்னிங்சில் 113 ரன்னுக்கு சுருண்டது. லியான், ஹெட் தலா 4, ஸ்வெப்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சுலப வெற்றி: பின், 10 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ரமேஷ் மெண்டிஸ் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய டேவிட் வார்னர் வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர் (10), கவாஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கேமிரான் கிரீன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆஸ்திரேலிய அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூலை 8ல் காலேயில் துவங்குகிறது.

 

‘சுழலில்’ அசத்திய ஆஸ்திரேலியாவின் நாதன் லியான், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் கபிலை (434 விக்கெட், 131 டெஸ்ட்) முந்தி 10வது இடம் பிடித்தார். லியான், 109 டெஸ்டில், 436 விக்கெட் சாய்த்துள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (653) உள்ளனர்.

மூலக்கதை