அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்

தினகரன்  தினகரன்
அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்

பீஜிங்: சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க டாலரை ஓரம் கட்டி, பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு தனது நாட்டு கரன்சியான யுவானில் கடன் வழங்க, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளுடன் இணைந்து சீனா புதிய நிதியத்தை உருவாக்குகிறது. அமெரிக்காவின் கரன்சியான டாலர், உலகளாவிய நாணயமாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு மிகவும் வலு சேர்க்கிறது.இந்நிலையில், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தனது சொந்த கரன்சியான யுவானை உலகளாவிய நாணயமாக மாற்ற பல ஆண்டாக முயற்சிக்கிறது. இதே எண்ணம் கொண்ட ரஷ்யாவுடன் இணைந்து சீனா, இருதரப்பு டாலர் பயன்பாட்டை வெகுவாக குறைத்துள்ளது. சீனா-ரஷ்யா இடையேயான பல வர்த்தகங்கள் அவர்களின் சொந்த கரன்சியிலேயே நடக்கின்றன. மேலும், 40 நாடுகளுடன் 300 கோடி யுவான் மதிப்புள்ள இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை சீனா செய்து கொண்டுள்ளது. இந்நிலையில், சீனா அடுத்த கட்டமாக, யுவான் நிதித் தொகுப்பு ஒன்றை உருவாக்க களமிறங்கி உள்ளது. இதற்காக, சீனாவின் மக்கள் வங்கியுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (பிஐஎஸ்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதி தொகுப்பு ஒப்பந்தத்தில் சீனாவுடன் இந்தோனேஷியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய 5 நாடுகள் இணைந்துள்ளன. இந்த யுவான் நிதியத்தை சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி நிர்வகிக்கும். பணவீக்கம், சந்தை ஏற்ற, இறக்க காலங்களில் பணம் தேவைப்படும் உறுப்பு நாடுகளுக்கு இந்த நிதித் தொகுப்பிலிருந்து கடன் வழங்கப்படும். இந்த அமைப்பில் மேலும் பல நாடுகள் இணையும் பட்சத்தில், யுவானின் பரிமாற்றம் பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே, இலங்கை, பாகிஸ்தான் உட்ப உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் சீனா கடன் கொடுத்து, திவாலாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை