மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்க பாஜ தீவிரம் ஆட்சியை காப்பாற்ற உத்தவ் கடைசி முயற்சி: எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உருக்கமான அழைப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்க பாஜ தீவிரம் ஆட்சியை காப்பாற்ற உத்தவ் கடைசி முயற்சி: எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உருக்கமான அழைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்க பாஜ தீவிரம் காட்டிவரும் நிலையில், ‘எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’ என, அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இக்கட்சியை சேர்ந்த 40 அதிருப்தி  எம்எல்ஏ.க்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இணைந்து, அசாமில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இது தொடர்பாக ஷிண்டேவுடன், மகாராஷ்டிரா பாஜ தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நவிஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், சிவசேனா கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் நிலை உருவாகி இருக்கிறது.இதனால், ஆட்சியை காப்பாற்றுவதற்கான கடைசி கட்ட முயற்சிகளில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு நேற்று அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளில், ‘நீங்கள் இன்னமும் சிவசேனாவில்தான் இருக்கிறீர்கள். மும்பைக்கு திரும்பி வந்து என்னுடன் பேசினால், அனைத்து பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். கட்சி தலைவர் என்ற முறையில் உங்களின் நலனில் எனக்கு அக்கறை உள்ளது. நீங்கள் கவுகாத்தியில் தங்கியுள்ளீர்கள். உங்களில் பலரை பற்றி தினம் தினம் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் இதயம் இன்னமும் சிவசேனாவுடன் தான் இருக்கிறது. சிவசேனா உங்களுக்கு தந்த கவுரவத்தை வேறு யாராலும் தர முடியாது,’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், பாஜ.வுடன் இணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, அடுத்த ஓரிரு நாட்களில் ஷிண்டே மும்பை வந்து, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெல்லியில் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பட்நவிசும் பேசி வருகிறார். இதைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் பாஜ எம்எல்ஏ.க்கள் மும்பைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

மூலக்கதை