ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமாக அரபிக் கடலில் பல எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் கடலுக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இடத்துக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லவும், பொருட்களை எடுத்து செல்லவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி பணியாளர்கள் 7 பேர், 2 விமானிகள் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் நேற்று இந்த இடத்துக்கு சென்றனர். மும்பை கடற்கரையில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள எண்ணெய் கிணற்றின் மீது தரையிறங்க முயன்றபோது, ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. உடனே, கடலோர காவல்படையினர் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 9 பேரும் மீட்கப்பட்டனர். ஆனால், 3 பணியாளர்கள் உட்பட 4 பேர் சுயநினைவின்றி இருந்தனர். அவர்கள் உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 4 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், ஊழியர்கள் இடையே சோகம் நிலவுகிறது.

மூலக்கதை