யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்க கட்டுப்பாடு தொற்று இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

தினகரன்  தினகரன்
யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்க கட்டுப்பாடு தொற்று இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாத்திரை மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் புதிய தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவசர ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உட்பட சில கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா பாதிப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கணிசமாக குறைந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஒரு சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில்  தற்போது தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விழாக்களும், யாத்திரைகளும் நடத்தப்படலாம். அதில், பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தொற்று அறிகுறி இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே இவற்றில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என மக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். முதன்மை தடுப்பூசிகள்,  முன்னெச்சரிக்கை டோஸ் போட விரும்பினால், அனைத்து தகுதியான நபர்களுக்கும் அவர்கள் யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்கும் முன்பாக  சம்பந்தப்பட்ட நிர்வாகங்களே போடலாம்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை