3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

தினகரன்  தினகரன்
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

லீட்ஸ்: நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில்  நியூசிலாந்து 329 ரன்னும், இங்கிலாந்து 360 ரன்னும் எடுத்தன. 31 ரன்கள்  பின்தங்கிய நிலையில 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து326 ரன்னில்  ஆல்-அவுட் ஆனது. பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது  இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 39 ஓவர்களில் 2  விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது. ஆலி போப் 81 ரன்களுடனும், ஜோ  ரூட் 55 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 5-வது மற்றும்  கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஆலி  போப் 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட்டுடன்  இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர். இங்கிலாந்து  அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் 86 ரன்னுடனும், பேர்ஸ்டோ 71  ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்  வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆட்டநாயகன்  விருதும், ஜோ ரூட் (இங்கிலாந்து), டேரில் மிட்செல் (நியூசிலாந்து) ஆகியோர்  தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:- ஆட்டம் மிக நன்றாக போனது. உலகின் தலைசிறந்த அணியை 3-0 என்று வென்றது உண்மையில் பெரிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் குறித்த வீரர்களின் மனநிலை மாற்றமே இதற்கு காரணம். ரன்களை மிக விரைவாக அடித்தோம், இதை நம்ப முடியவில்லை. இதற்கான பெரும் பெருமை கோச் பிரெண்டம் மெக்கல்லமையே சாரும். அதிலும் இந்த போட்டியில் வென்றது மிக பெரிய விஷயம். 55 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் பேர்ஸ்டோ, ஓவர்டன் ஆடிய விதம் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்குள் வந்து இத்தகைய ஒரு ஆட்டத்தை ஆட வீரர்கள் உண்மையில் விரும்பியுள்ளனர். அந்தச் சூழல் அமையும் போது அனைத்தும் சரியான இடத்தில் வந்து நிற்கிறது. 36 வயதிலும் பிராட் அருமையான ஓவர்களை வீசுகிறார். ஜாக் லீச் மிக அருமையாக செயல்பட்டார். இந்தியா ஒரு வேறு மாதிரியான எதிரணி... இருப்பினும் இந்தியாவுக்கு எதிராகவும் இதே ஆக்ரோஷ மனநிலையில்தான் ஆடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை