பருவநிலை தொடர்பான இந்தியாவின் முயற்சிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
பருவநிலை தொடர்பான இந்தியாவின் முயற்சிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தர வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

எல்மாவ்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தர வேண்டுமென ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜெர்மனியில் நேற்று நடந்தது. இந்த  மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, முனிச் நகரில் நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். நேற்று மாநாடு நடக்கும் எல்மாவ் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை  ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன்   சிறிது நேரம் மோடி உரையாடினார். இதன்பின்  தலைவர்கள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு: பருவநிலை, எரிசக்தி,  சுகாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அதில் அவர், ‘‘பருவநிலை மாற்றத்தை  எதிர்கொள்வதற்காக  இந்தியா  மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஜி7 அமைப்பில்  உள்ள பணக்கார நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும்.   இந்தியாவில்  கிடைக்கும்   புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியை  பயன்படுத்துவதற்கு ஜி7 நாடுகள் முன்வர  வேண்டும்.  படிம எரிபொருள் அல்லாத  எரிபொருட்களை 40 சதவீதம் பயன்படுத்தி 9  வருடங்களுக்கு முன்பே இந்தியா தனது இலக்கை  எட்டி உள்ளது. அதே போல்  எத்தனால் கலந்த பெட்ரோலை 10 சதவீதம் பயன்படுத்துகிறது. உலகிலேயே காற்றாலை  மூலம் இயங்கும் விமான நிலையமும் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியா போன்ற  பெரிய நாடுகள் இதில்ப ல சாதனைகள் படைத்து வருகின்றன. பருவநிலையை  பாதுகாப்பதற்கு நாடு ஆற்றி வரும் பணிகளுக்கு இந்த திட்டங்களே சாட்சி ஆகும்.  இதே போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு  வளரும் நாடுகளும் இந்தியாவை  பின்பற்ற வேண்டும். இந்த துறையில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்  மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஜி 7 நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்’’  என்றார்.

மூலக்கதை