கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன்

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன்

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். அவரது காதல் படங்களுக்காகவே இளம் ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்படும் இயக்குனர்.

கவுதம் மேனனுக்கு ஆர்யா யோஹன் மற்றும் துருவ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆர்யா யோஹன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய யோஹன் மூன்று ஓவர்கள் பந்து வீசி 26 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

யோஹன் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தன் மகன் பெயரில்தான் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என விஜய் நடிக்க வேண்டிய ஒரு படத்திற்குப் பெயர் வைத்திருந்தார் கவுதம் மேனன். அவரது இரண்டாவது மகனின் பெயர் துருவ். அவர் பெயரை வைத்துத்தான் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு 'துருவ நட்சத்திரம்' என்றும் பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். இரண்டாவது மகன் துருவ்வும் கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவர்தானாம்.

அடுத்த சில வருடங்களில் கவுதம் மேனன் மகன் யோஹன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூலக்கதை