சீனாவில் கொரோனா அதிகரிப்பு; 12 குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்

தினகரன்  தினகரன்
சீனாவில் கொரோனா அதிகரிப்பு; 12 குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்

பீஜிங்: சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சைனா டெய்லி இதழ் தெரிவித்துள்ளது. நகரில் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுக்கடைகள், திரையரங்குகள், சலூன்கள், பூங்காக்கள் மூடப்பட்டன. மக்காவோ நகரத்தில் 600,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை