இந்திய பெண்கள் மீண்டும் வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் மீண்டும் வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல் | ஜூன் 25, 2022

தம்புலா: இலங்கைக்கு எதிரான 2வது ‘டி–20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 எனக் கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. தம்புலாவில் இரண்டாவது போட்டி நடந்தது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை பெண்கள் அணிக்கு விஷ்மி குணரத்னே (45), கேப்டன் சமாரி அதபத்து (43) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தீப்தி சர்மா ‘சுழலில்’ ஹர்ஷிதா சமரவிக்ரமா (9), நிலாக்சி டி சில்வா (1) சிக்கினர். ஹாசினி பெரேரா (0), ஒஷாதி ரணசிங்கே (5), கவிஷா தில்ஹாரி (2) ஏமாற்றினர்.

இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன் எடுத்தது. அனுஷ்கா சஞ்ஜீவனி (8), சுகந்திகா குமாரி (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

மந்தனா நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (17), மேக்னா (17) ஓரளவு கைகொடுத்தனர். மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (39) நம்பிக்கை தந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3), யஸ்திகா பாட்யா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், கவிஷா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

 

இந்திய அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (31), தீப்தி சர்மா (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.

 

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனது 8வது ரன்னை எட்டிய போது, சர்வதேச ‘டி–20’ அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனைகள் வரிசையில் மிதாலி ராஜை (2364 ரன், 89 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். ஹர்மன்பிரீத், இதுவரை 123 போட்டியில், ஒரு சதம், 6 அரைசதம் உட்பட 2372 ரன் எடுத்துள்ளார்.

 

மந்தனா ‘2000’

ஸ்மிருதி மந்தனா, தனது 28வது ரன்னை கடந்த போது சர்வதேச ‘டி–20’ அரங்கில் 2000 ரன் எடுத்த 3வது இந்திய வீராங்கனையானார். இதுவரை 86 போட்டியில், 14 அரைசதம் உட்பட 2011 ரன் எடுத்துள்ளார்.

 

* தவிர, 84 இன்னிங்சில் இம்மைல்கல்லை அடைந்தார் மந்தனா. இதன்மூலம் சர்வதேச ‘டி–20’ அரங்கில் குறைந்த இன்னிங்சில் 2000 ரன் எடுத்த இந்திய வீராங்கனைகள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் மிதாலி ராஜ் (70 இன்னிங்ஸ்) உள்ளார். ஹர்மன்பிரீத் (88 இன்னிங்ஸ்) 3வது இடத்தில் உள்ளார்.

மூலக்கதை