மத்திய பிரதேசம் ரன் குவிப்பு: ரஞ்சி கோப்பை பைனலில் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
மத்திய பிரதேசம் ரன் குவிப்பு: ரஞ்சி கோப்பை பைனலில் | ஜூன் 25, 2022

பெங்களூரு: ரஞ்சி கோப்பை பைனலில் ரஜத் படிதர் சதம் கடந்து கைகொடுக்க மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்தது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் மும்பை, மத்திய பிரதேச (ம.பி.,) அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 368/3 ரன் எடுத்திருந்தது. படிதர் (67), ஆதித்யா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

படிதர் சதம்: நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த மத்திய பிரதேச அணிக்கு கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா (25) சோபிக்கவில்லை. அக்சத் ரகுவான்ஷி (9), பார்த் சஹானி (11) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ரஜத் படிதர் (122), சதம் கடந்து கைகொடுத்தார். அனுபவ் அகர்வால் (8), குமார் கார்த்திகேயா (9) நிலைக்கவில்லை.

 

பொறுப்பாக ஆடிய சரண்ஷ் ஜெயின் அரைசதம் கடந்தார். மத்திய பிரதேச அணி 529/9 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மீண்டும் போட்டி தொடர்ந்த போது சரண்ஷ் ஜெயின் (57) அவுட்டானார். மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. கவுரவ் யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட் சாய்த்தார்.

 

நல்ல துவக்கம்: பின், 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணிக்கு ஹர்திக் தாமோர் (25), கேப்டன் பிரித்வி ஷா (44) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நான்காம் நாள் முடிவில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்திருந்தது. அர்மான் ஜாபர் (30), சுவேத் பார்கர் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ம.பி., சார்பில் குமார் கார்த்திகேயா, கவுரவ் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை