முன்னிலை பெற்றது நியூசிலாந்து: டாம் லதாம் அரைசதம் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: டாம் லதாம் அரைசதம் | ஜூன் 25, 2022

லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில், டாம் லதாம் அரைசதம் கடந்து கைகொடுக்க நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 329 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 55 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. ஜானி பேர்ஸ்டோவ் (130*), ஜேமி ஓவர்டன் (89*) கைகொடுக்க, இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 264/6 ரன் எடுத்திருந்தது.

 

பேர்ஸ்டோவ் அபாரம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ், 150 ரன்னை கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 241 ரன் சேர்த்த போது பவுல்ட் ‘வேகத்தில்’ ஓவர்டன் (97) வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராட் (42) ஓரளவு கைகொடுத்தார். அபரமாக ஆடிய பேர்ஸ்டோவ் 162 ரன்னில் ஆட்டமிழந்தார். சவுத்தீ ‘வேகத்தில்’ ஜாக் லீச் (8) வெளியேறினார்.

 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 360 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 4, சவுத்தீ 3, வாக்னர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

லதாம் அரைசதம்: பின், 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் (8) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டாம் லதாம் (76) அரைசதம் கடந்தார். ஜோ ரூட் பந்தில் கான்வே (11) அவுட்டானார். கேப்டன் கேன் வில்லியம்சன் (48) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

 

தேநீர் இடைவேளைக்கு பின் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து, 122 ரன் முன்னிலையில் இருந்தது.  ஹென்ரி நிக்கோல்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மாத்யூ பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை