ஜெயிக்கிற குதிர...நம்ம மதுர * அரைசதம் விளாசினார் அனிருத் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
ஜெயிக்கிற குதிர...நம்ம மதுர * அரைசதம் விளாசினார் அனிருத் | ஜூன் 25, 2022

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றது. நேற்று சேப்பாக்கத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த போட்டியில் மதுரை, மூன்று முறை சாம்பியன் ஆன சேப்பாக்கம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மதுரை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

ஆகாஷ் அபாரம்

சேப்பாக்கம் அணிக்கு துவக்கம், ‘மிடில் ஆர்டர்’ என எதுவும் சரியாக அமையவில்லை. கேப்டன் கவுஷிக் (1), சாந்து பந்தில் வீழ்ந்தார். ஜெகதீசன் (1), சுஜாய் (11) என இருவரையும் கிரண் ஆகாஷ் வெளியேற்றினார். மறுபக்கம் சுழலில் அசத்தினார் வருண் சக்ரவர்த்தி. முதலில் சோனு யாதவை (9) அவுட்டாக்கிய இவர், அடுத்து ராஜகோபாலை (4) போல்டாக்கினார். 

சிலம்பரசன் ‘வேகத்தில்’ ஜெகநாத் ‘டக்’ அவுட்டானார். சித்தார்த் 2 ரன் எடுத்தார். 51 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின் இணைந்த சசிதேவ் (58), ஹரிஷ் ஜோடி அணியை மீட்டது. சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்தது. ஹரிஷ் (39), சந்தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை சார்பில் ஆகாஷ் 3, வருண் 2 விக்கெட் சாய்த்தனர்.

அனிருத் அரைசதம்

மதுரை அணிக்கு ஆதித்யா (10), அருண் கார்த்திக் (31) சுமார் துவக்கம் தந்தனர். சதுர்வேத், கவுசிக் என இருவரும் ‘டக்’ அவுட்டாகினர். ராஜ்குமார் 19 ரன் எடுத்தார். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய அனிருத் அரைசதம் விளாசி, அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மதுரை அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அனிருத் (58), சாந்து (14) அவுட்டாகாமல் இருந்தனர். 

மூலக்கதை