பாயுமா பாண்ட்யா படை * இந்தியா–அயர்லாந்து ‘டி–20’ துவக்கம் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
பாயுமா பாண்ட்யா படை * இந்தியா–அயர்லாந்து ‘டி–20’ துவக்கம் | ஜூன் 25, 2022

டப்ளின்: இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ‘டி–20’ தொடர் இன்று துவங்குகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது.

அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று டப்ளினில் நடக்கிறது. கோஹ்லி, ரோகித், ஷமி, தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் என பலர் இங்கிலாந்து சென்று விட்டனர்.

சமீபத்திய போட்டிகளில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணி கேப்டனாக உள்ளார். துவக்கத்தில் இஷான் கிஷான், ருதுராஜ் ஜோடி, ‘மிடில் ஆர்டரில்’ சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனும் இடம் பெறலாம்.

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 5வது இடத்தில் அசத்தவுள்ளார். பின்வரிசையில் பாண்ட்யா, ‘ஆல் ரவுண்டர்’ வெங்கடேஷ் இடம் பெறலாம். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா களமிறங்குவது உறுதியில்லை.

பவுலிங் எப்படி

பவுலிங்கில் புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான் கூட்டணி மறுபடியும் கலக்கலாம். தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங், ‘வேகத்தில்’ மிரட்டும் உம்ரான் மாலிக் இடம் பெறுவது சந்தேகம். சுழலில் சகால் உள்ளார். எனினும் புதிய சூழலில் புதியவர்களை சோதனை செய்ய, பயிற்சியாளர் லட்சுமண் அனுமதிப்பாரா என இன்று காணலாம்.

சொந்தமண் பலம்

அயர்லாந்து அணி பால்பிர்னே தலைமையில் களமிறங்குகிறது. டாக்ரெல், பால் ஸ்டெர்லிங், கேம்பெர் என அனுபவ வீரர்களும் அணியில் உள்ளனர். தவிர சொந்தமண் என்பதால் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாமல், சவால் கொடுக்க முயற்சிக்கும்.

மூலக்கதை