கோஹ்லி, ஸ்ரேயாஸ் அரைசதம் * பயிற்சியில் இந்தியா ஆதிக்கம் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
கோஹ்லி, ஸ்ரேயாஸ் அரைசதம் * பயிற்சியில் இந்தியா ஆதிக்கம் | ஜூன் 25, 2022

லீசெஸ்டர்: பயிற்சி போட்டியில் அசத்திய கோஹ்லி, ஸ்ரேயாஸ் அரைசதம் விளாசினர்.

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி, வரும் ஜூலை 1–5ல் பர்மிங்காமில் நடக்கவுள்ளது.

இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 246 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. லீசெஸ்டர்ஷயர் அணி 244 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்து, 82 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

சைனி அபாரம்

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. லீசெஸ்டர் அணிக்காக அசத்தினார் நவ்தீப் சைனி. இவரது வேகத்தில் விஹாரி(20), பரத் (43) வீழ்ந்தனர். ஷர்துல் தாகூர் 28 ரன் எடுத்தார். 

நம்பிக்கையுடன் ரன் சேர்த்த கோஹ்லி அரைசதம் எட்டினார். சாய் கிஷோர் பந்தில் புஜாரா(22)போல்டானார். பும்ரா பந்தில் கோஹ்லி(67) அவுட்டானார். ஸ்ரேயாஸ் 62 ரன் எடுத்து கைகொடுத்தார். மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 364 ரன் எடுத்து, 366 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 56 ரன் எடுத்த ஜடேஜா அவுட்டாகாமல் இருந்தார். 

மூலக்கதை