அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலானது: பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலானது: பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றப்பட்டது.  அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, துப்பாக்கியை எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.இந்நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்து உள்ளது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 21 வயதிற்குப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வாங்கச் சென்றால் அவர்களை பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும்.  இந்த சீர்திருத்தங்கள் அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த திருத்தங்களை விடக் குறைவு தான் என்றாலும், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இறுதியாக பிரதிநிதிகள் சபையிலும் நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இந்த மசோதா சட்டமாகி உள்ளது. ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படும் முன்பாக, இந்த சட்டத்தில் பைடன் கையெழுத்திட்டார். இதனால், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இது பற்றி பைடன் கூறுகையில், ‘‘இந்த சட்டத்தின் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும்,’’ என்றார்.

மூலக்கதை