அமெரிக்காவில் நடக்கும் கருக்கலைப்பு கலாட்டா....கடவுள் பாதி... மனிதன் பாதி...

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் நடக்கும் கருக்கலைப்பு கலாட்டா....கடவுள் பாதி... மனிதன் பாதி...

* மதமும், சுதந்திரமும் கலந்த இடியாப்ப சிக்கல்* கொந்தளிக்கும் பெண்கள்; தவிக்கும் பைடன்கருக்கலைப்பு என்பது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம். பெரும்பாலும் ஒரு கருவை அநாவசியமாக கலைக்க பெரும்பாலான நாடுகளில் தடை உள்ளது. அதே சமயம், மருத்துவ காரணங்களுடன் சட்டப்பூர்வமாக கருவை கலைக்கவும் சட்டங்கள் உள்ளன. அனைத்து சுதந்திரங்களையும் வாரி வழங்கும் அமெரிக்காவிலும் ஒருகாலத்தில் கருவை கலைக்க தடைகள் இருக்கத்தான் செய்தன. அதை எதிர்த்து கடந்த 1971ம் ஆண்டு பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தனது கருவை கலைக்க வேண்டுமென மருத்துவமனையை அணுகிய போது மருத்துவர்கள் மறுத்தனர். இது பெண்கள் உரிமை சம்மந்தப்பட்ட விஷயம், கருக்கலைப்பு விஷயங்களை பெண்கள் எளிதாக அணுக வகை செய்ய வேண்டுமென முதன் முதலில் சட்டப் போராட்டத்தை தொடங்கியவர்தான் மைக்கேல் ரோ. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், முதல் 3 மாதங்களில் கருவை கலைப்பதற்கான முழு உரிமையை பெண்களுக்கு வழங்கியது. 3-6 மாத கருவை கலைக்க சில கட்டுப்பாடுகளும், 6-9 மாத கருக்கலைப்பதற்கு தடையும் விதித்தன. அரசியலமைப்பு இந்த சுதந்திரத்தை வழங்கியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பு, உலகிற்கே முன்னோடியான ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது. இதன் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு கருவை கலைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அங்கு, பெண்கள் யாருடைய சம்மதமும், ஒப்புதலும் இன்றி சுயமாக அவர்களே அவர்களின் கருவை சட்ட ரீதியாக மருத்துவமனைக்கு சென்று கலைத்துக் கொள்ளலாம். இடையூறுகள் எதுவுமே கிடையாது. கேள்விகளும் கிடையாது. வயதுக்கு வந்த சிறுமிகளிடம் இருந்தே இந்த சுதந்திரம் தொடங்கி விடுகிறது.அமெரிக்காவின் இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பல நாடுகளிலும் சுதந்திரமான கருக்கலைப்புக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் பல உலக நாடுகளிலும் ஒரு சிறந்த முன்னுதாரமாக பார்க்கப்பட்டது. ஆனாலும், அமெரிக்காவிலும் கூட பழமைவாத சிந்தனை கொண்ட சில மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராகவே உள்ளன. கருக்கலைப்பு சுதந்திரம் என்பது அமெரிக்காவில் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடும். அந்த வகையில், மூன்றரை மாதத்திற்கு பிந்தைய கருவை கலைக்க மிஸ்ஸிசிப்பி மாகாணம் தடை விதிக்க மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், ‘கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,’ என தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு, கருக்கலைப்பு சுதந்திரத்தை விரும்பும் அமெரிக்க பெண்களின் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த தீர்ப்பால், இனி வரும் காலங்களில் பெரும்பாலான மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும்படி சட்டங்கள் திருத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததுமே, இதற்காகவே காத்திருந்தது போல் 10க்கும் மேற்பட்ட மாகாண அரசுகள் கருக்கலைப்புக்கு தடை விதித்து விட்டன. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த கருக்கலைப்பு ஆதரவு பெண்கள் அமைப்பினர், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கொந்தளித்து உள்ளனர். தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கி விட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.  கருக்கலைப்பு என்பது பெண் மற்றும் ஒரு சிசுவின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு உயிரை பிரசவிக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு எடுக்க வேண்டியது, அந்த உயிரை சுமக்கும் பெண்ணுக்குதான் முழு உரிமை உண்டு. இதில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது முழுக்க முழுக்க பெண்கள் சுதந்திரம், பெண்ணுரிமை சார்ந்த விஷயம் என்பதுதான் அமெரிக்க பெண்களின் கருத்து. அதாவது, ‘என் உடல், என் உரிமை’ என்பதுதான் அவர்களது வாதம். மேலும், கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகள் இருந்தால் அது சட்ட விரோத கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் இதன் காரணமாக பல பெண்கள் இறக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த விஷயத்திற்கு மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர் கருத்துக்கள் நிலவுகின்றன. மறைமுகமாக மதவாதம் நிரம்பிய அமெரிக்காவில் கூட, கருவை அழிப்பது பாவச் செயலாக கருதப்படுகிறது. ‘எந்த ஒரு உயிரையும் அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது,’ என்ற அடிப்படையில், பழமைவாத சிந்தனை கொண்ட மதவாதிகள் கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே நேரம், இந்த விஷயத்தில் அரசியலும் ஆதிக்கம் செலுத்துகிறது.  ‘பெண்கள் சுதந்திரம்’ என்ற கோஷத்தின் அடிப்படையில், இது பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று அதிபர் பைடனும், அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியும் குரல் எழுப்புகின்றனர். ஆனால், பழமைவாத எண்ணங்களுடன் பிணைந்துள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியினரோ, கருக்கலைப்பு தடையை வரவேற்பவர்களாக உள்ளனர். இதனால், அதே பழமைவாத சிந்தனையும், அரசியலும் கலந்து இத்தகைய தீர்ப்பு தரப்பட்டுள்ளதாக அமெரிக்க பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள். துப்பாக்கி கலாசாரத்தில் அடிக்கடி நடந்த தாக்குதல்கள்; உயிரிழப்புகள், ரஷ்ய - உக்ரைன் போர், சீனாவுடன் மோதல் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். கருக்கலைப்பு சுதந்திரத்தை கோரி அமெரிக்க பெண்கள் எப்படி ஆவேசமாக குரல் கொடுக்கிறார்களோ அதேபோல், துப்பாக்கி வைத்து கொள்வதையும் தங்களின் அடிப்படை சுதந்திரமாக இந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். தற்போது தான், துப்பாக்கி வைத்து கொள்ளும் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் இடையே நிறைவேற்றி இருக்கிறார் பைடன். இது முடிந்த கையோடு, கருக்கலைப்பு சர்ச்சை எழுந்துள்ளது. இதை சமாளிப்பதில் அடுத்த சில மாதங்கள் அவருக்கு ஒடி விடும்.  இந்த கருக்கலைப்பு விவகாரம் அமெரிக்காவோடு நிற்கவில்லை. அதைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு பேசும் பொருளாகி உள்ளது. கருக்கலைப்புக்கு சுதந்திரம் வழங்கி பெண்ணுரிமையை நிலைநாட்டுவதில் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்த அமெரிக்காவே தற்போது பின்வாங்கி இருப்பதால், பல நாடுகளிலும் உள்ள கருக்கலைப்புக்கு எதிரான அமைப்புகள் தெம்பாகி உள்ளன. மீண்டும் பல உலக நாடுகளிலும் கருக்கலைப்புக்கு எதிரான பிரசாரங்கள் வலுவடைய தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்த கருக்கலைப்பு சுதந்திரத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வேட்டு வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், அமெரிக்க பெண்கள் இனி சுதந்திரமாக கருவை கலைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மதம், அரசியல் ரீதியாக ஒருசாரர் இந்த தீர்ப்பை இனிப்பு தந்து கொண்டாடுகின்றனர். மறுபுறம், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள், பெண்ணுரிமையை பறித்து விட்டதாக எதிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த விவகாரம் உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.துரதிருஷ்டவசமான பிழைஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியில், ‘இந்த தீர்ப்பு நீதித்துறையின் ஒரு துரதிருஷ்டவசமான பிழை. நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விடும்’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடவுள் அளித்த தீர்ப்புஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இது கடவுள் தந்த தீர்ப்பு. பல தலைமுறைகளின் வாழ்விற்கான வெற்றி. இது சாத்தியமானதற்கு காரணம், நான் அளித்த அனைத்து வாக்குறுதியையும் நிறைவேற்றியது மட்டுமின்றி, எனது ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் வலுவான அரசியலமைப்புவாதிகளை நியமித்ததும் தான்,’’ என்றார். டிரம்ப்பின் உள்குத்து தீர்ப்பா?கருக்கலைப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில், கருக்கலைப்பு சுதந்திரத்தை ரத்து செய்து 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்துள்ளனர். இவர்களில் 3 நீதிபதிகள் டிரம்ப் அதிபராக இருந்தபோது மிகுந்த சர்ச்சைக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இந்த தீர்ப்பில் டிரம்ப்பின் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் கிளப்பப்பட்டு உள்ளது.உலக தலைவர்கள் அதிர்ச்சிகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் பயங்கரமானவை. ஆணோ, பெண்ணோ, அவர் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ முடிவு செய்வது மிகவும் தவறானது. கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழக்கும் லட்சக்கணக்கான அமெரிக்க பெண்களுக்கு எனது வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்: கருக்கலைப்பு அனைத்து பெண்களின் அடிப்படை உரிமை. இது அவர்களின் உடல்நலம் மற்றும் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்னை. எனவே கருக்கலைப்பு சுதந்திரம் தொடர்வதை அமெரிக்க அரசு உறுதி செய்ய வேண்டும். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்: ஒரு பெண் அவரது உடல் சார்ந்த முடிவை எடுக்கும் அடிப்படை உரிமையை அகற்றுவதைப் பார்ப்பது நம்ப முடியாத அளவிற்கு வருத்தம் அளிக்கிறது. நியூசிலாந்தில் கருக்கலைப்பை கிரிமினல் பிரச்னையாக கருதாமல், ஆரோக்கியமாக கருதுவதற்கு சமீபத்தில் சட்டம் இயற்றினோம்.உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்: இந்த தீர்ப்பு கவலையையும், ஏமாற்றத்தையும் தருகிறது. இது பெண்களின் உரிமை மற்றும் சுகாதாரப்  பாதுகாப்புக்கான அணுகல் ஆகிய இரண்டையும் குறைக்கிறது.இந்தியாவில் தினமும் 13 பெண்கள் உயிரிழப்பு    இந்தியாவில் மகப்பேறு இறப்புக்கு பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் 3வது முக்கிய காரணமாக உள்ளன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஒவ்வொரு நாளும் 13 பெண்கள் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 64 லட்சம் கர்ப்பங்கள் கலைக்கப்படுகின்றன. 2007 முதல் 2011ம் ஆண்டில் இந்தியாவில் நடந்ததில் 67% கருக்கலைப்புகள் பாதுகாப்பாற்றவை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.பதறும் ஆப்ரிக்கா; வாடிகன் வரவேற்புகருக்கலைப்பு சட்ட விரோதமாக்கப்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்காவின் தீர்ப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எல்சால்வடாரில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரச்சாரகரான சாரா லரின் என்பவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் கருக்கலைப்புக்கு எதிரான பிரசாரங்களை மேம்படுத்தும்’’ என்றார். கென்யாவின் கருக்கலைப்பு உரிமைகளுக்கான ஆர்வலர் அர்ச்சேன் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான தடைகள் கொண்டு வரப்பட்டால், அது ஆப்ரிக்காவில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைக்கும்போது அச்சமாக உள்ளது. இது ஆப்ரிக்கா முழுவதும் கருக்கலைப்பு எதிர்ப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும்’’ என்றார். உலகின் பிற பகுதிகளை விட ஆப்ரிக்காவில் தான் அதிகளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கின்றன. அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் வரவேற்றுள்ளது.இந்திய சட்டம் சொல்வது என்ன?* இந்தியாவில் கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு புறம்பானதல்ல. கருக்கலைப்பு என்பது இந்திய சட்டம் அனுமதிக்கும் ஒரு மருத்துவ வழிமுறைதான். * இதற்காக, ‘மருத்துவ கருக்கலைப்பு சட்டம்’ கடந்த 1971ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, காலத்திற்கு ஏற்ப சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. * பெண்ணின் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்றாலோ, பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமாகவோ அல்லது திட்டமிடப்படாத கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கருவின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருந்தாலோ சட்டப்படியாக அதை கலைக்கலாம்.* 12 முதல் 20 வாரங்களுக்குட்பட்ட கருவை கலைக்க வேண்டுமெனில், கருக்கலைப்பு சேவை வழங்குவதற்கென பதிவுபெற்ற மருத்துவர் ஒருவரின் அனுமதியை அப்பெண் பெற வேண்டும். பின் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம்.* இதற்கு சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், அவருடைய ஒப்புதல் மட்டுமே போதும். கணவரின் ஒப்புதல் கூட தேவையில்லை. அப்பெண் திருமணமாகாதவர் என்றாலும்கூட, சம்பந்தப்பட்ட துணையரின் ஒப்புதல் கட்டாயமில்லை. மைனர் எனில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி தேவை. * 20 - 24 வாரங்களான கரு என்றால், கருக்கலைப்பு சேவை வழங்குவதற்கென பதிவு பெற்ற 2 மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று கருக்கலைப்பு செய்யலாம். * இந்த கால இடைவெளியில் கருக்கலைப்பு செய்வது மருத்துவ ரீதியாக சற்று சவாலானது என்பதால் இதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், காரண விவரங்களும் கேட்கப்படலாம்.* 24 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய வேண்டுமென்றால் மாநில மருத்துவக் குழுவை கருவை கலைக்க விரும்பும் கர்ப்பிணிகள் அணுக வேண்டியிருக்கும்.பாலின அடிப்படையில் கருவை கலைப்பது, பிறரின் நிர்பந்தத்துக்காக கருக்கலைப்புக்கு உள்ளாவது, கர்ப்பம் சார்ந்த பயத்தின் காரணமாக கருக்கலைப்புக்கு முயல்வது போன்றவை சட்டத்துக்கு புறம்பானதாகும்.* 12 கோடி- உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும்  12 கோடி திட்டமிடப்படாத கர்ப்பங்கள் நிகழ்கின்றன. அதாவது, சராசரியாக ஒருநாளைக்கு 3 லட்சத்து 31 ஆயிரம்.* 25 கோடி - உலகளவில் 25.7 கோடி பெண்கள் கர்ப்பத்தை தவிர்க்க பாதுகாப்பான, நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதில்லை.* 223 மரணம் - கருக்கலைப்பு சட்டங்கள் கடுமையாக உள்ள நாடுகளில் ஒரு லட்சம் பிரசவத்தில் 223 மகப்பேறு மரணங்கள் நிகழ்கின்றன. இதுவே கருக்கலைப்பு சட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளில் 77 மகப்பேறு மரணங்கள் மட்டுமே நிகழ்கின்றன.* 60 சதவீதம்- திட்டமிடப்படாத கர்ப்பங்களில் 60 சதவீதம் கருக்கலைப்பில் முடிகின்றன. இதில் பெரும்பாலானவை பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள்.முழு தடை உள்ள நாடுகள் கருக்கலைப்பு சட்ட விரோதம் என முழு தடை விதிக்கப்பட்ட நாடுகள்* காங்கோ* டொமினிக் குடியரசு* எகிப்து* எல் சல்வாடோர்* ஹைதி* ஹண்டுரோஸ்* ஜமைக்கா* ஈராக்* லாவோஸ்* மடகஸ்கார்* மாலி* மால்டா* மவுரிடானியா* பிலிப்பைன்ஸ்* சான் மரினோ* செனிகல்* டோங்காதடை இல்லா நாடுகள் கருக்கலைக்கு எந்த தடையும் விதிக்காத நாடுகள்:* அல்பேனியா* ஆர்மீனியா* ஆஸ்திரியா* அஜர்பெய்ஜான்* பஹ்ரைன்* பெலராஸ்* பெல்ஜியம்* போனியா * பல்கேரியா* கம்போடியா* கனடா* கேப் வெர்டி* குரோஷியா* கியூபா* எஸ்தோனியா* பிரான்ஸ்* ஜெர்மனி* கிரீஸ்* கயானா* கஜகஸ்தான்* லாட்வியா* லக்சம்பர்க்* மங்கோலியா* மான்டெனிகிரோ* நேபாளம்* நெதர்லாந்து* வடகொரியா* நார்வே* ரோமானியா* ரஷ்யா* செர்பியா* சிங்கப்பூர்* சுலோவேனியா* தென் ஆப்ரிக்கா* ஸ்பெயின்* தஜிகிஸ்தான்* துருக்கி* துருக்மேனிஸ்தான்* உக்ரைன்* உருகுவே* அமெரிக்கா* உஸ்பெகிஸ்தான்* வியட்நாம்இதுதவிர இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தகுந்த மருத்துவ காரணங்களுடன் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.

மூலக்கதை