பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, நரேந்திர மோடியின் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரும் வங்கி மோசடிகள் என குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கிகளில் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஏபிஜி சிபியார்ட் நிறுவனம் 23,000 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை என தெரிவித்துள்ள கார்கே, DHFL நிறுவனம் 35,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுவரை 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில் இருந்து DHFL நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு 27,000 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் ஊழல் மற்றும் பொய் வாக்குறுதி கட்சி என்ற பொருள்படும் படியாக பாஜகவை Bankfrauds மற்றும் Jumla Party என்று விமர்சனம் செய்துள்ளார்.

மூலக்கதை