தினேஷ் கார்த்திக் முன்னேற்றம்: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | ஜூன் 22, 2022

தினமலர்  தினமலர்
தினேஷ் கார்த்திக் முன்னேற்றம்: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | ஜூன் 22, 2022

துபாய்: ஐ.சி.சி., ‘டி–20’ பேட்டர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், 87வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் (392 ரேங்கிங் புள்ளி), 108 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறந்த ‘பினிஷராக’ ஜொலித்தார். இத்தொடரில் 2 அரைசதம் உட்பட அதிகபட்சமாக 206 ரன் குவித்த இந்திய துவக்க வீரர் இஷான் கிஷான் (703), 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் (818) முதலிடத்தில் நீடிக்கிறார்.

 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய ‘சுழல்’ வீரர் யுவேந்திர சகால் (574 புள்ளி), 26வது இடத்தில் இருந்து 23வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்க தொடரில் ‘சுழலில்’ அசத்திய இவர், 6 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (792) ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

 

ஜடேஜா ‘நம்பர்–1’: டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (385 புள்ளி) முதலிடத்தில் தொடர்கிறார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (346) 4வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். தமிழகத்தின் அஷ்வின் (341), விண்டீசின் ஹோல்டர் (329) முறையே 3, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

 

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் (850), பும்ரா (830) முறையே 2, 3வது இடத்தில் நீடிக்கின்றனர். டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா (754), விராத் கோஹ்லி (742) முறையே 8, 10வது இடத்தில் தொடர்கின்றனர்.

மூலக்கதை