இறைச்சி வெட்டும் இயந்திரத்தில் தங்கம் கடத்திய தயாரிப்பாளர் கைது

தினகரன்  தினகரன்
இறைச்சி வெட்டும் இயந்திரத்தில் தங்கம் கடத்திய தயாரிப்பாளர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய சர்வதேச விமானநிலையங்கள் வழியாக துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வந்த இறைச்சி வெட்டும் இயந்திரத்தில் 2.33 கிலோ தங்கம் மறைத்து கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொச்சி சுங்க இலாகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் கொச்சியை சேர்ந்த ஷாபின் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரான சிராஜுதீன் என்பவர்தான் துபாயிலிருந்து தங்கத்தை அனுப்பி வைத்தார் என்பது தெரியவந்தது.சிராஜுதீன் துபாயில் லேத் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய நிறுவனத்தில் வைத்து இறைச்சி வெட்டும் இயந்திரத்தில் ரகசிய அறையை ஏற்படுத்தி அதில் தங்கத்தை மறைத்து வைத்து அனுப்பியுள்ளார். இதேபோல இதற்கு முன்பும் இவர் பலமுறை தங்கத்தை கடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து சிராஜுதீனை கைது செய்ய சுங்க இலாகா நடவடிக்கை எடுத்தது. அதன்படி சர்வதேச போலீஸ் உதவியுடன் கொச்சிக்கு வரவழைக்கப்பட்ட அவரை சுங்க இலாகா நேற்று கைது செய்தது. இதற்கிடையே நடிகை பலாத்கார வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு துபாயில் தலைமறைவாக இருப்பதற்கு சிராஜுதீன் தான் உதவினார் என்பது தெரியவந்தது. இதனால் கொச்சி போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.

மூலக்கதை