14 எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு மாறுகின்றனர் உத்தவுக்கு நெருக்கடி முற்றுகிறது: சின்னத்தையும் பறிக்க திட்டம்

தினகரன்  தினகரன்
14 எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு மாறுகின்றனர் உத்தவுக்கு நெருக்கடி முற்றுகிறது: சின்னத்தையும் பறிக்க திட்டம்

மும்பை: கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பான்மையினருடன் அசாமில் முகாமிட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் அணிக்கு மாற சிவசேனாவின் 14 எம்பிக்கள் திட்டமிட்டுள்ளது, முதல்வர் உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உத்தவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. உண்மையான சிவசேனா தாங்கள்தான் என கோரி வரும் ஷிண்டே தரப்பினர், சின்னத்தையும் முடக்க திட்டமிட்டிருப்பது, உத்தவ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா - பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா தலைமையில் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி உருவானது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த கூட்டணியின் ஆட்சிதான் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இதன்பிறகு ஒன்றிய அரசுக்கும், சிவசேனா அரசுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி நடந்த சட்ட மேலவை தேர்தலில், பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட 5 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்.காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார். இதனால், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது அம்பலமானது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அன்றிரவே மகாராஷ்டிர நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏக்களுடன் சூரத்தில் உள்ள ஒட்டலில் தங்கினார். சூரத்தில் இருந்த ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்த, சிவசேனா மூத்த தலைவர்கள் நர்வேகர் மற்றும் ரவீந்திர பதக் ஆகியோர், அவரை முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் பேச வைத்தனர். ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக இருந்தார். மேலும், ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சூரத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கினார். தன்னுடன் 34 எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதாக கூறி புகைப்படம் வெளியிட்டார்.மேலும் கட்சி கொறடாவான சுனில் பிரபுவை நீக்கிவிட்டு, எம்எல்ஏ பரத் கோகவாலே புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டு விட்டதாக ஷிண்டே அறிவித்தார். மேலும் போதுமான எம்எல்ஏக்கள் தங்கள் வசம் உள்ளதாக ஷிண்டே கோரியதால், அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. நிலைமை கைமீறி போனதால், முதல்வர் உத்தவ் தாக்கரே, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவை நேற்று முன்தினம் இரவு காலி செய்து, தனது வீடான மாதோஸ்ரீக்கு வந்தார். இதைத்தொடர்ந்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் தரப்பில் பரபரப்பாக ஆலோசனைகள் நடந்தன. இதற்கிடையே, நேற்று பேட்டியளித்த சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ‘‘அதிருப்தி எம்எல்ஏக்கள் நிபந்தனைப்படி கூட்டணியில் இருந்து விலகத் தயார். ஆனால், அவர்கள் கவுகாத்தியில் இருந்து 24 மணி நேரத்தில் மும்பைக்கு வரவேண்டும்’’ என நிபந்தனை விதித்தார். இது கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் உத்தவ் திடீரென மனம் மாறி பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பாரா என கேள்வி எழுப்பினர்.இதன்பிறகு, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘‘கூட்டணியில் இருந்து விலக வேண்டும் எனக்கோரும் அதிருப்தி எம்எல்ஏக்கள், மும்பைக்கு வந்து தங்கள் கோரிக்கையை கூற வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கூறினார்’ என விளக்கம் அளித்தார். மேலும், போதுமான எம்எல்ஏக்கள் தங்கள் வசம் உள்ளார்கள் என அதிருப்பதி தரப்பினர் கூறினாலும், அதனை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும். இதுதான் நிரூபிப்பதற்கான முறையான வழி. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள அனைவரும், முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில்தான் உள்ளனர்’ என்றார். இதே கருத்தை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோரும் வலியுறுத்தினர்.நேற்றைய நிலவரப்படி தன்வசம் 42 சிவசேனா எம்எல்ஏக்கள் உள்ளதாக ஷிண்டே கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான புதிய வீடியோ, புகைப்படத்தையும் ஷிண்டே வெளியிட்டார். ஆனால், அதில் 35 பேர்தான் சிவசேனாவினர் எனவும், 7 பேர் சுயேச்சைகள் எனவும் அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மேலும் சிவசேனா 14 எம்பிக்கள் ஷிண்டே அணியில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், இவர்கள் தவிர 400க்கும் மேற்பட்ட முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள் ஷிண்டேக்கு ஆதரவு தர உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே தரப்பு கோர உள்ளதாக வெளியான தகவல்கள் இந்த பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.‘‘எது கேட்டாலும் வழங்கத் தயார்...’ஷிண்டேயின் பின்னணியில் பாஜ?அசாம் ஓட்டலில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேசுவது குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘‘நான் எடுத்துள்ள இந்த முடிவு, ஒரு வரலாற்று நிகழ்வு என ஒரு தேசிய கட்சியினர் என்னிடம் கூறினர். எனக்கு எது தேவையாக இருந்தாலும், அதனை அவர்கள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்’’ என ஷிண்டே கூறுவதாக காட்சி அமைந்துள்ளது. சிவசேனாவுக்கும் பாஜவுக்கும் இடைேய கடும் மோதல் போக்கு உள்ள நிலையில், தேசிய கட்சி என பாஜவைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சூரத்தில் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் தங்கியுள்ளதற்கு, பாஜ நிர்வாகி சி.ஆர்.பாட்டீல்தான் காரணம் எனவும், ஏக்நாத் ஷிண்டேயுடன் இவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் எனவும் வெளியான தகவல்கள், பின்னணியில் பாஜ இருப்பதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால், இதை மறுத்துள்ள அஜித் பவார், மகாராஷ்டிரா அரசியல் நாடகத்தில் பாஜவுக்கு எந்த பங்கும் இல்லை. மகாவிகாஸ் கூட்டணி அரசு தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

மூலக்கதை