இலங்கை பொருளாதார நெருக்கடி அதிபர், பிரதமர் ரணிலுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை பொருளாதார நெருக்கடி அதிபர், பிரதமர் ரணிலுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு நெருக்கடியை சமாளிக்க விவசாய பணியில் ராணுவம் இறங்கி உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியா சார்பில் 31,288 கோடி இலங்கைக்கு கடன் உதவி அளித்துள்ளது. தற்போது, மேலும் கடன் வழங்க இந்தியாவை இலங்கை வலியுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா உதவி செய்தது நன்கொடை அல்ல, கடன். அதை திருப்பி கொடுக்க வேண்டும். அவர்களும் தொடர்ந்து கடன் தர இயலாது. ஏன் என்றால், கடன் வழங்க அவர்களுக்கும் ஒரு அளவுகோல் உள்ளது,’ என்றார். இந்த சூழலில் இந்திய வெளியுறவுச் செயலர் குவாத்ரா, தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன், பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத், வெளியுறவுத் துறை கூடுதல் செயலர் கார்த்திக் பாண்டே ஆகியோர் அடங்கிய குழு நேற்று இலங்கை சென்றது. அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது நாட்டில் உள்ள பொருளாதார மற்றும் உற்பத்தி நெருக்கடி, கடனுதவி, இலங்கையின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் தற்போதைய ஆதரவு போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு தனது முழு ஆதரவை இந்தியா வழங்கும் என்று இந்திய குழுவினர் ராஜபக்சேவிடம் தெரிவித்தனர். மேலும், இந்திய குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார். * பெட்ரோல், டீசல் வாங்க காத்திருந்த 10 பேர் பலி இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல், டீசல் வாங்க பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த மாதம் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவுக்கு பெட்ரோல் கிடைக்காததால், நோயாளி ஒருவர் உயிரிழந்தார். கடந்த வாரம் கொழும்பில்  பாணந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல மணி நேரம் வரிசையில்  காத்திருந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 9 பேர் இறந்து உள்ளனர். இந்நிலையில், அங்குருவாதோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் உயிரிழந்தார். இதன் மூலம், பலி எண்ணிக்கை 10 ஆனது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்குட்பட்டவர்களும், அனைவரும் மாரடைப்பால் பலியானதும் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை