மரம் மீது வேன் மோதிய பயங்கர விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
மரம் மீது வேன் மோதிய பயங்கர விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் கடந்த வாரம் ஹரிதுவாருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். ஹரிதுவாரில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட புனிதத் தலங்களில் வழிபட்ட அவர்கள், நேற்று மாலை அங்கிருந்து ரயிலில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால், கனமழை பெய்ததன் காரணமாக உரிய நேரத்தில் அவர்களால் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, இரவு நேரத்தில் அங்கு வந்த ஒரு வேனில் ஏறி அவர்கள் லக்கிம்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில், பிலிபிட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த பெரிய மரத்தின் மீது அவர்களின் வேன் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த ஓட்டுநர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை