அமெரிக்காவில் பயங்கரம்: ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் பயங்கரம்: ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் ஓடும் ரயிலில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பள்ளி, மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான வயது வரம்பை உயர்த்த அந்நாட்டு அதிபர் ஆலோசித்து வருகிறார்.இந்நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள முனி ஃபாரஸ்ட் ஹில் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிந்தது. மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ காவல் துறை தெரிவித்துள்ளது. 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை