அக்னிபாதை திட்டத்தை கண்டித்து போராட்டம்; ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது.!

தினகரன்  தினகரன்
அக்னிபாதை திட்டத்தை கண்டித்து போராட்டம்; ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது.!

தெலங்கானா: அக்னிபாதை திட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது, ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தில் 17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்களை 4 ஆண்டு காலத்துக்கு பணியில் அமர்த்தும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அக்னிபாதை திட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது ரயில் இருக்கைகளுக்கு தான் தீ வைத்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 17ம் தேதி செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு தீ வைத்தது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரித்திவிராஜ் என்ற வாலிபர், ரயில் இருக்கைகளுக்கு தீ வைக்கும் காட்சிகளை தன் நண்பர்கள் மூலம் செல்போனில் வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை