ஒரே நேரத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் போராட்டம் 30 ஆண்டில் இல்லாத வகையில் பிரிட்டனில் ரயில்வே ஸ்டிரைக்: லட்சக்கணக்கான பயணிகள் அவதி

தினகரன்  தினகரன்
ஒரே நேரத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் போராட்டம் 30 ஆண்டில் இல்லாத வகையில் பிரிட்டனில் ரயில்வே ஸ்டிரைக்: லட்சக்கணக்கான பயணிகள் அவதி

லண்டன்: பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் 40 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ரயில் சேவை பாதித்துள்ளது. கொரோனா தொற்று, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பொருளாதார சரிவு, ரஷ்யா - உக்ரைன் போர் என பல்வேறு பிரச்னைகளால் உலக பொருளாதாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30 அல்லது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதால், விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில் ஊதியம் பிரச்னையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ரயில் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. முக்கிய நிலையங்கள் வெறிச்சோடிய காணப்படுகிறது. லண்டன் மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்களின் போராட்டத்துக்கு 37% பேர் ஆதரவும், 45% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.    இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டு உள்ள பிரிட்டனுக்கு உதவ இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய உள்ளது. இந்த சூழலில், ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது பலரின் வாழ்க்கையை பாதிக்கும். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் வர்த்தகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,’ என்றார்.

மூலக்கதை