இலங்கைக்கு உதவ இந்தியா அளித்தது நன்கொடை அல்ல: நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் பேச்சு

தினகரன்  தினகரன்
இலங்கைக்கு உதவ இந்தியா அளித்தது நன்கொடை அல்ல: நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் பேச்சு

கொழும்பு: `பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த உதவிகள் நன்கொடை அல்ல; திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடன்,’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நிதி, பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, சமையல் காஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை சமாளிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று பேசியதாவது:இந்தியாவிடம் இருந்து இதுவரை ₹31,288 கோடி கடன் உதவி பெறப்பட்டுள்ளது. மேற்கொண்டு கடன் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரையில் நமக்கு செய்துள்ள பொருள், நிதியுதவி நன்கொடை அல்ல; கடன் தொகை. அதை நாம் திருப்பி செலுத்த வேண்டும்.  இந்தியா இதுபோன்று இலங்கைக்கு தொடர்ந்து கடன் உதவி அளிக்க முடியாது. ஏனென்றால், அந்நாட்டிற்கும் கடன் வழங்கும் வரையறை உள்ளது. மறுபுறம், இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஏராளமாக உள்ளது. இவை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடை அல்ல.இந்த வாரம் இலங்கை வரவிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய உள்ளனர். பெட்ரோல், டீசல், காஸ், மின்சாரம் மற்றும் உணவு விவகாரத்தில் இலங்கை பற்றாக்குறை என்ற நிலையைக் கடந்து மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, அதிலும் குறிப்பாக அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இருப்பது மிகவும் சவாலான ஒன்று. இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மிக மோசமான சூழல் இதுதான். நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளித்தால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கு முதலில் இலங்கை வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த வேண்டும். இதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் பெறுவதற்கான ஒப்புதலை பெறுவதை தவிர வேறு எதுவும் வழியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை