15 ரன் எடுத்து அபார வெற்றி!

தினகரன்  தினகரன்
15 ரன் எடுத்து அபார வெற்றி!

கோலாலம்பூர்: இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என ஐசிசி நிரந்தர உறுப்பு நாடுகள்  நேரடியாக  பங்கேற்க உள்ளன.மேலும் 4 நாடுகள்  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நடத்தும் ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்று போட்டி மூலம் தேர்வு செய்யப்படும். இந்த போட்டி  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  நடக்கிறது. மலேசியா, பூடான், பக்ரைன், ஹாங்காங், குவைத், ஓமன், கத்தார்,  சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் என 10 நாடுகளின் மகளிர் அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.  இந்த 10 அணிகளில்  பாதிக்கும் மேற்பட்ட அணிகளில் தமிழகம் உட்பட இந்தியாவை  பூர்விகமாக கொண்ட வீராங்கனைகள் பலர் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நடந்த லீக் சுற்று ஆட்டம் ஒன்றில், பி பிரிவில் உள்ள நேபாளம் - பக்ரைன் அணிகள் மோதின. மழை காரணமாக  ஓவர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட் செய்த  பக்ரைன் 7 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு  14 ரன் எடுத்தது. இதில் உதிரியாக ஒரு ரன் கிடைத்தது.அதனையடுத்து 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் ஆடியது. அந்த அணி 3.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு  15 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேபாளம் எடுத்த 15 ரன்னில்  8 ரன் உதிரிகளாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் வெற்றி: ஏ பிரிவில் உள்ள ஓமன் - சிங்கப்பூர்  மகளிர் அணிகள் நேற்று மோதின. சிங்கப்பூர் டாஸ் வென்று  பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட ஓமன் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய சிங்கப்பூர் 19.5 ஓவரில்  5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மூலக்கதை