வங்கத்தை வென்றது விண்டீஸ் | ஜூன் 19, 2022

தினமலர்  தினமலர்
வங்கத்தை வென்றது விண்டீஸ் | ஜூன் 19, 2022

ஆன்டிகுவா: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய விண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 103, விண்டீஸ் 265 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் சாகிப் அல் ஹசன் (63), நுாருல் ஹசன் (64) கைகொடுக்க, வங்கதேச அணி 245 ரன் எடுத்தது. விண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட் சாய்த்தார். பின், 84 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, 3ம் நாள் முடிவில் 49/3 ரன் எடுத்திருந்தது. கேம்ப்பெல் (28), பிளாக்வுட் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஜான் கேம்ப்பெல் அரைசதம் கடந்தார். ஷான்டோ பந்தை சிக்சருக்கு அனுப்பிய இவர், வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 88 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேம்ப்பெல் (58), பிளாக்வுட் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஆட்ட நாயகன் விருதை கீமர் ரோச் வென்றார். விண்டீஸ் அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூன் 24ல் செயின்ட் லுாசியாவில் துவங்குகிறது.

மூலக்கதை