‘ஆடியது’ மழை...வாடியது மனம்: இரு அணிக்கும் கோப்பை | ஜூன் 19, 2022

தினமலர்  தினமலர்
‘ஆடியது’ மழை...வாடியது மனம்: இரு அணிக்கும் கோப்பை | ஜூன் 19, 2022

பெங்களூரு: மழை அடிக்கடி குறுக்கிட்டதால், ஐந்தாவது ‘டி–20’ போட்டி பாதியில் ரத்தானது. தொடர் 2–2 என சமன் ஆனதால், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.  

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா இரு போட்டியில் வென்றிருந்தன. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. முழங்கையில் காயம் அடைந்த பவுமாவுக்கு பதில் தென் ஆப்ரிக்க கேப்டன் பொறுப்பை மஹராஜ் ஏற்றார். பவுமா, ஷம்சி, ஜான்சென் நீக்கப்பட்டு, ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிக்ஸ், ரபாடா இடம் பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற மஹராஜ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

துவக்கம் தடுமாற்றம்: இந்திய துவக்க வீரர்கள் ருதுராஜ், இஷான் கிஷான் களமிறங்கிய தருணத்தில், மழை கொட்டியது. போட்டி துவங்குவதில் 50 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், 19 ஓவர் போட்டியாக நடந்தது. மஹராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் இரு சிக்சர் விளாச, மொத்தம் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. இதற்கு பின் நிகிடி ‘வேகத்தில்’ மிரட்டினார். இவரது ‘ஸ்லோ பாலில்’ இஷான்(15) ‘ஆப்–ஸ்டம்ப்’ பறந்தது. அடுத்த ஓவரில் இன்னொரு ‘ஸ்லோ பால்’ வீசிய நிகிடி இம்முறை ருதுராஜை(10) வெளியேற்றி ‘ஷாக்’ கொடுத்தார். பின் மீண்டும் மழை குறுக்கிட, ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. 16 நிமிடம் மட்டும் நடந்த போட்டியில் இந்திய அணி 3.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 28 ரன் எடுத்தது. ஸ்ரேயாஸ்(0), ரிஷாப்(1) அவுட்டாகாமல் இருந்தனர். மழை ஓயாமல் பெய்ய, ரசிகர்களின் மனம் வாடியது. இறுதியில் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

மூலக்கதை