ஆஸி.க்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: நிசாங்கா சதத்தால் இலங்கை வெற்றி

தினகரன்  தினகரன்
ஆஸி.க்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: நிசாங்கா சதத்தால் இலங்கை வெற்றி

கொழும்பு: ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 9 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் ஆரோன் ஃபின்ச் பொறுப்புடன் ஆடி 62 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 10, லபுஷேன் 29 ரன் எடுத்து அவுட் ஆகினர். 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க, பின்னர் வந்த வந்த அலெக்ஸ் கேரி 49, டிராவிஸ் ஹெட் 70 ரன், மேக்ஸ்வெல் 33 ரன்களை விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது.292 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா 25 ரன்னில் அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாங்காவும் குசால் மெண்டிஸும் இணைந்து அட்டகாசமாக ஆடி 213 ரன்களை குவித்தனர். குசால் மெண்டிஸ் 87 ரன் எடுத்திருந்தோது ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். பொறுப்புடன் ஆடிய நிசாங்கா 137 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை