முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்

தினமலர்  தினமலர்
முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்


புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் இந்தியாவில் கார்களை தயாரிக்க முன்வருவோம்’ என, டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மைக் காலமாகவே டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து வருகிறார்.ஆனால் இந்திய அரசு, ‘முதலில் இந்தியாவில் கார்களை தயார் செய்யுங்கள்; அதன்பின் வரி சலுகை குறித்து பேசலாம்’ என கண்டிப்பாக இருக்கிறது. பிற வெளிநாட்டு நிறுவனங்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு, இந்தியாவில் கார்களை தயாரித்து வரும்போது, டெஸ்லாவுக்காக பிரத்யேக சலுகை வழங்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது, மத்திய அரசு.இந்நிலையில்,



இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைப்பது குறித்த வாடிக்கையாளர் ஒருவரின் ‘டுவிட்டர்’ பதிவுக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், கார் விற்பனைக்கும் ,சேவைக்கும் முதலில் அனுமதி தராவிட்டால், நிறுவனம், இந்தியாவில் எந்த பகுதியிலும் ஆலையை அமைக்காது’ என பதில் அளித்துள்ளார்.அதாவது வரியை குறைக்கும்பட்சத்தில், முதலில் காரை இறக்குமதி செய்து விற்பனை செய்வது, அதன் பின் நிலைமையை பொறுத்து, இந்தியாவில் தயாரிப்பில் இறங்குவது என்பது அவரது நிலைப்பாடு. கடந்த மாதம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் டெஸ்லா கார்களை தயாரிக்க ரெடியாக இருந்தால், எந்த பிரச்னையும் இல்லை.‘ஆனால், கண்டிப்பாக கார்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது’ என தெரிவித்திருந்தார்.


ஆனால், எலான் மஸ்க் உலகின் எந்த பெரிய நாடுகளைவிடவும், இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருக்கிறது என்றும்; அதை குறைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.இந்தியாவில் தற்போது, வெளிநாடுகளில் முழுக்க தயாரான 40 ஆயிரம் டாலருக்கு அதிகமான விலை கொண்ட கார்களுக்கு 100 சதவீதம் வரியும், அதற்கு குறைவான விலை கொண்ட கார்களுக்கு 60 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. மொத்தத்தில் ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’ கதையாக போய்க்கொண்டிருக்கிறது.

மூலக்கதை