‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள்

தினமலர்  தினமலர்
‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள்


புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், புதிய செயல்பாட்டு வழிமுறை திட்டத்தை கொண்டு வர இருப்பதாக, நுகர்வோர் விவாகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பொதுவாக, மின்னணு வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை ‘ஆர்டர்’ செய்யும் நுகர்வோர், தாங்கள் வாங்க இருக்கும் பொருட்களின் தரம், மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து, பிறர் என்ன தெரிவித்துள்ளனர் என்பதை அறிய விரும்புவர்.அவர்கள் வாங்க இருக்கும் பொருட்களுக்கு, மற்றவர்கள் நல்ல விமர்சனமும், தரமதிப்பும் கொடுத்திருக்கும்பட்சத்தில், நம்பி, அப்பொருட்களை வாங்க முன்வருவார்கள்.இந்நிலையில், போலியான மதிப்பீடுகளும், விமர்சனங்களும் அதிகரித்து, பலர் அதை நம்பி வாங்கி, ஏமாற்றம் அடைவதாகவும் நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகரித்துள்ளன.


இதையடுத்து, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் இப்பிரச்னை குறித்து, கடந்த வெள்ளியன்று விவாதித்தது.இந்த சந்திப்புக்கு பின், இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், புதிதாக ஒரு செயல்பாட்டு வழிமுறை திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது குறித்து அமைச்சரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:


முதற்கட்டமாக நிறுவனங்களிடம் இது குறித்த செயல்முறை வழிகாட்டு திட்டம் எதுவும் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். பின், நாம் வழிகாட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதன் வாயிலாக, போலியான விமர்சனங்களை தடுக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தோம். அனைவரது கருத்துக்களையும் கேட்டு உள்ளோம்.நுகர்வோர் தினசரி பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தில், போலிகள் இருக்கக் கூடாது என்பதில் அரசு கண்டிப்பாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை