ஐபிஎல் 15வது சீசன் பைனலில் இன்று குஜராத் - ராஜஸ்தான் பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 15வது சீசன் பைனலில் இன்று குஜராத்  ராஜஸ்தான் பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் பைனலில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் 15வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகளில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெளியேறி விட்டன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கூடிய நிறைவு விழவுக்குப் பிறகு, இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் பைனலில் இந்த 2 அணிகளும் பலபரீட்சை நடத்துகின்றன.நடப்பு சீசனில் அறிமுக அணியாகக் களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அதிரடியாக விளையாடி லீக் சுற்றில் முதலிடம் பிடித்தது. பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிய குஜராத், முதல் தகுதிச் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. இப்போது அதே ராஜஸ்தான் அணியை மீண்டும் இறுதி ஆட்டத்தில் சந்திக்க உள்ளது.அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியில் டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ராகுல் திவாதியா, மேத்யூ வேடு, சாய் சுதர்சன் என அதிரடி பேட்ஸ்மேன்களுடன் முகமது ஷமி, லாக்கி பெர்குசன், ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், சாய் கிஷோர் என அசத்தல் பந்து வீச்சாளர்களும் அணி வகுக்கின்றனர். அதனால் அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பை வென்று வெற்றி மகுடம் சூட குஜராத் வேகம் காட்டும். அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. காரணம் நடப்புத் தொடரில் குஜராத் அணியுடன் மோதிய 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் தோற்றுள்ளது. அதே சமயம், ராஜஸ்தான் தோற்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆட்டங்களில், தேவைப்பட்ட நேரங்களில் வேகம் காட்டி 2வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளனர். ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பைனலில் விளையாட இருக்கிறது. அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மீணடும் மகுடம் சூட முன்னாள் சாம்பியன் முனைப்புக் காட்டும்.அதற்கேற்ப சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மயர், ஆல் ரவுண்டர் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஒபெத் மெக்காய், யஜ்வேந்திர சாஹல் என பெரும் படையே தயாராக இருக்கிறது.சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கப்போவது உறுதி.ராஜஸ்தான் ராயல்ஸ்சஞ்சு சாம்சன் (கேப்டன்), அனுனய் சிங், ஆர்.அஷ்வின், கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், ஜாஸ் பட்லர், கேசி.கரியப்பா, யஜ்வேந்திர சாஹல், துருவ் ஜுரெல், ஒபெத் மெக்காய், டேரில் மிட்செல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், தேவ்தத் படிக்கல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, குல்தீப் சென், தேஜஸ் பரோகா, வாண்டெர் டுஸன், குல்திப் யாதவ்.குஜராத் டைட்டன்ஸ்ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வருண் ஆரோன், டொமினிக் டிரேக்ஸ், லாக்கி பெர்குசன், குர்கீரத் சிங் மான், அல்ஜாரி ஜோசப், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், ரஷித் கான், விரித்திமான் சாஹா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், சாய் சுதர்ஷன், பிரதீப் சங்வான், விஜய் ஷங்கர், ஷுப்மன் கில், ராகுல் திவாதியா, மேத்யூ வேடு, ஜெயந்த் யாதவ், யஷ் தயாள்.இதுவரை...குஜராத் புது அணி என்பதால் இந்த தொடரில்தான் ராஜஸ்தான் அணியுடன் மோதியுள்ளது. லீக் சுற்றில் ஏப்.14ம் தேதி நடத்த 24வது ஆட்டத்தில் குஜராத் அணி 37 ரன் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பிளே ஆப் சுற்றில் மே 24ம் தேதி நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்திலும் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மூலக்கதை