சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: வெங்கையா நாயுடு மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: வெங்கையா நாயுடு மகிழ்ச்சி

சென்னை-சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலை, நேற்று திறந்து வைக்கப்பட்டது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிலையை திறந்து வைத்து, கருணாநிதி பற்றி நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.சென்னை அண்ணாசாலையை ஒட்டி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரம் உள்ள, கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுப்பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சிலையை, நேற்று மாலை 5:30 மணிக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின், கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.தமிழக காங்., தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்,ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திருமாவளவன், பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் துணைவி ராஜாத்தி உள்ளிட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர்.விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:கருணாநிதி சிலையை திறந்து வைக்க வேண்டும் என, முதல்வர் என்னிடம் கூறியபோது, எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

கருணாநிதி சிறந்த நிர்வாகி. நிலையான அரசை தந்தவர். நலிந்த மக்களுக்காக உழைத்தவர். சமூக நீதியை பல்வேறு தரப்பினருக்கு அளித்தது அவர் சிறப்பு.என் மாணவர் பருவத்தில் இருந்து, அவரை கவனித்து வந்துள்ளேன்; தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

தற்போது, அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், பொதுப் பணியில் நான் சோர்வடையவில்லை. சென்னை என் இதயம் அருகில் உள்ளது. என் நீண்ட பொதுப் பயணத்தில், கருணாநிதியுடன் உரையாடி உள்ளேன்; விவாதம் செய்துள்ளேன். அவர் கூறியதில், சிலவற்றை ஏற்றுள்ளேன்; சிலவற்றை மறுத்துள்ளேன். அவர் கருத்தை மறுத்தாலும், அவர் மீதான மரியாதை மாறவில்லை.

பொது வாழ்வில் அரசியல்வாதிகள், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அனைவரும் மக்களுக்காக உழைக்கிறோம். நாம் எதிரிகள் அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். எந்த கட்சியில் இருந்தாலும், அனைவரும் ஒரே நாட்டில் உள்ளோம். மக்களுக்காக அவரவர் வழியில் உழைக்கிறோம் என்பதை, மனதில் கொள்ள வேண்டும்.

அனைவரும் ஜனநாயகத்தை, சட்டத்தை மதிக்க வேண்டும்.கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, விரைந்து வந்தேன். காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து, பிரதமரிடம் பேசினேன். அரசியல் வேறுபாட்டை மறந்து, கைது நடவடிக்கையை கண்டித்தேன். கருணாநிதி, போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். பொது வாழ்வில் நகைச்சுவை முக்கியம். அவரிடம் நகைச்சுவை இருந்தது; பேச்சில் பொருள் இருந்தது.

அவரது வசனம், தமிழ் திரையுலகில் மாற்றத்தை ஏற்படுத்தியது. எழுத்து, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சிறந்த அரசியல் சீர்திருத்தவாதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி என, பன்முகத்தன்மை கொண்டவர். நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர். இந்தியா தற்போது முன்னோக்கி செல்கிறது. நிலையான அரசு, சிறந்த தலைவர்கள் உள்ளனர். அனைவரும் இணைந்து, மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.

மாநிலம் வளர்ந்தால், நாடு வளரும். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் வேறுபாட்டை மறந்து, இந்தியாவுக்காக பணியாற்ற வேண்டும். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனிச் சிறப்பு உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழி, தாய் நாடு மிகவும் முக்கியம். தாய் மொழி, பிறந்த இடம் ஆகியவற்றை மறக்கக் கூடாது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழி கண் போன்றது; பிற மொழிகள் கண்ணாடி போன்றது. கண் இல்லை என்றால், கண்ணாடி தேவைப்படாது. அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுங்கள். 'மம்மி, டாடி' என கூறுவதை தவிர்த்து, அழகாக 'அம்மா' என அழையுங்கள்.

வீட்டிலும், வெளியிலும் பேசும்போது தாய் மொழியில் பேசுங்கள். நம் தாய் மொழி தெரியாதவர்களிடம், அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் பேசுங்கள். நான் எங்கு சென்றாலும், என் உடை குறித்து பேசுவர். எனக்கு விருப்பமாக இருப்பதால் அணிகிறேன். துணை ஜனாதிபதி ஆனதும், 'தற்போது உங்கள் உடை எது?' என, பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'உடையில் மாற்றம் இல்லை; முகவரியில் மட்டும் மாற்றம்' என்றேன்.சர்வதேச கருத்தரங்கிற்கு செல்லும்போதும், வேட்டி, சட்டை அணிவேன். சீதோஷ்ண நிலை மாறுபடும்போது மட்டும் உடையில் மாற்றம் செய்வேன்.

தமிழ் மக்கள் தங்கள் உடை, கலாசாரம், இசை, இலக்கியம் போன்றவற்றை பிரபலப்படுத்தி வருகின்றனர்.நாம் எந்த மொழியையும் எதிர்க்க வேண்டாம்; திணிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது. அனைத்து அரசுகளும், உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். வாஜ்பாய் அரசு, சாலை இணைப்பு, ரயில் இணைப்பு, விமான இணைப்பு, அரசியல் இணைப்பு ஆகியவற்றை உருவாக்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

தலைவர்களை மதிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தான் நாட்டின் சிறப்பு. மக்கள் நலத் திட்டங்களில் ஒற்றுமை அவசியம். கருத்தில் வேறுபட்டாலும், இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். தலைமைச் செயலர் இறையன்பு நன்றி கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தை வான் உயரத்திற்கு உயர்த்திய கருணாநிதிக்கு, நம் நன்றியின் அடையாளமாக, சிலை எழுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தின் நிலையை உயர்த்த பாடுபட்டவர் என்பதால், கருணாநிதிக்கு தமிழகம் முழுதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது.ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை சிலைகளுக்கு நடுவில், கருணாநிதி சிலை அமைந்திருப்பது பொருத்தமாக உள்ளது.மற்றொரு சிறப்பு, கருணாநிதியால் ஓமந்துாரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டது தான், இந்த மாபெரும் கட்டடம். எனவே, இங்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.இவற்றுக்கு மகுடம் வைத்ததுபோல், துணை ஜனாதிபதி வந்து சிலையை திறந்து வைத்துள்ளார். அவர் நட்புக்குரிய இனிய நண்பராக எப்போதும் இருந்து வருகிறார். கடந்த 2001ல் கருணாநிதி, ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டபோது, அன்று ஜனாதிபதியாக இருந்த நாராயணன், பிரதமராக இருந்த வாஜ்பாய் துடிதுடித்து போயினர். அன்று ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தவர் தான் வெங்கையா நாயுடு. அதே நட்பை இன்று வரை பேணி வருகிறார்.தமிழக சட்டசபையில், கருணாநிதி படத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார். சிலையை துணை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். நாட்டின் பிரதமர்களை, ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கருணாநிதி. இந்திய அளவில் நிலையான ஆட்சி உருவாக துணை நின்றவர்.தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து, நவீன தமிழகத்தை உருவாக்கியவர். அவரை நவீன தமிழகத்தின் தந்தை என்று புகழ்கிறோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கியவர். தமிழகத்தில் ஒவ்வொருவரும் அவரால் பயன் பெற்றவர்களாக இருப்பர். அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்கு, சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.




* கருணாநிதி சிலை, 1.17 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தீனதயாளன் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது; 2,000 கிலோ எடை கொண்டது* தமிழகத்தில் இதுவரை அமைக்கப்பட்ட, முழு உருவ வெண்கல சிலைகளில் இது தான் மிக உயரமானது* 35 ஆண்டுகளுக்கு முன் அண்ணா சாலையில், 'தாராபூர் டவர்' அருகே அமைந்திருந்த கருணாநிதி சிலை, எம்.ஜி.ஆர்., மறைவின் போது, 1987ல் தகர்க்கப்பட்டது. தற்போது, அதே அண்ணா சாலையில், கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது* சிலையை திறந்து வைத்த பின், ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம், வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார். குழு புகைப்படம் எடுத்த போது, கனிமொழியையும் உடன் நிற்க வைத்து, படம் எடுத்துக் கொண்டார்* சிலை திறக்கப்பட்ட சில நிமிடத்தில், கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவுக்கு அனைவரும் செல்ல, தி.மு.க.,வினர் சிலை அமைந்த இடத்தில் திரளாக குவிந்தனர்.




மூத்த அமைச்சர்கள்!சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று மாலை 5:30 மணிக்கு நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்ட விழா என்பதால், கலைவாணர் அரங்கில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, முக்கிய பிரமுகர்கள் வந்து அமர்ந்தனர். மாலை 5:40 மணியளவில் அரங்கிற்கு வந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், ரகுபதி, சக்கரபாணி ஆகியோருக்கு முன் வரிசையில் இடமில்லை.அவர்களை வரவேற்று அமர வைக்கவும் யாரும் இல்லை. இதனால் கோபமடைந்தவர்கள், அடுத்தடுத்த வரிசைகளில் இருக்கைகள் காலியாக இருந்தபோதும், ஐ.பெரியசாமி, அரங்கின் கடைசியிலிருந்து, ஐந்தாவது வரிசையில் அமர்ந்தார். அவருடன் மற்ற அமைச்சர்களும் அமர்ந்தனர்.சில நிமிடங்களுக்குப் பின், அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தி, முன்வரிசைக்கு வருமாறு வலியுறுத்தினார். அதை ஏற்காத அவர்கள், விழா முடியும் வரை பின்வரிசையிலேயே அமர்ந்திருந்தனர். ***



சென்னை-சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலை, நேற்று திறந்து வைக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை