கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மக்களை தலைகுனிய வைக்கவில்லை: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மக்களை தலைகுனிய வைக்கவில்லை: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

ராஜ்கோட்: ‘கடந்த 8 ஆண்டுகால பாஜ ஆட்சியில், பொதுமக்களை தலைகுனிய வைக்கும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். ராஜ்கோட் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது: பாஜ  அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுகளில், ஏழைகளுக்கு சேவை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களின் பலன்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைவதற்கு அரசு ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறது. அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து வசதிகளை அளிக்கும் போது, பாகுபாடு முடிவுக்கு வருவதுடன், ஊழலுக்கான வாய்ப்பு குறையும்.  எங்களின் கடந்த 8 ஆண்டு ஆட்சியில், காந்தி மற்றும் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டோம். ஏழைகள், தலித்துகள், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை காந்தி விரும்பினார். அங்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஒரு வாழ்க்கை முறையாகும்.பெண்கள் நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள, ஜன்தன் கணக்குகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கும் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது. இலவச காஸ் சிலிண்டர் அளிக்கப்பட்டது. இந்த 8 ஆண்டு காலத்தில் மக்களுக்கு தலைகுனிவு ஏற்படக் கூடிய எந்த செயலையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.நானோ யூரியா தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், ‘‘கொரோனா  காலத்தில் உலகளவில் யூரியாவின் விலை உயர்ந்த போதிலும்,  இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படவில்லை. விவசாயிகளின் கரத்தை பலப்படுத்த  தேவையான அனைத்து வசதிகளையும் செய்தோம். வெளிநாடுகளில் இருந்து 50 கிலோ  யூரியாவை ரூ.3,500க்கு வாங்கி, விவசாயிகளுக்கு ரூ.300க்கு வழங்கினோம்.  மீதியுள்ள பணத்தை அரசு ஏற்றுக் கொண்டது,’’ என்றார்.முதல்வர்களுடன் கலந்துரையாடல்ஒன்றியத்தில் பாஜ அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி வரும் 31ம் தேதி இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன்  காணொலி மூலம் அவர் உரையாற்றுகிறார். அதே போல்  மாவட்ட பாஜ தலைவர்களுடனும் கலந்துரையாடுவார் என்று இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்  நேற்று தெரிவித்தார்.

மூலக்கதை