பட்லர் போன்ற மிக சிறந்த வீரர்கள் இருப்பது எங்களது பெரிய பலம்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் உற்சாகம்

தினகரன்  தினகரன்
பட்லர் போன்ற மிக சிறந்த வீரர்கள் இருப்பது எங்களது பெரிய பலம்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் உற்சாகம்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த குவாலிபயர்- 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 (42பந்து), டூபிளசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன் எடுத்தனர். கோஹ்லி 7, தினேஷ்கார்த்திக் 8 ரன்னில் அவுட் ஆகினர். ராஜஸ்தான் பந்துவீச்சில், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் 21 (1 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சஞ்சு சாம்சன் 23, படிக்கல் 9 ரன்னில் ஆட்டம் இழக்க ஜோஸ் பட்லர் அதிரடியாக சதம் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது. பட்லர் 60 பந்தில், 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 106, ஹெட்மயர் 2 ரன்னில் களத்தில் இருந்தனர். பட்லர் ஆட்டநாயகன், அதிக பவுண்டரி, சிக்சர், கேம் சேஞ்சர், சூப்பர் ஸ்டிரைக்ரேட் உள்பட 6 விருதுகளை அள்ளினார். நாளை நடைபெறும் பைனலில் குஜராத் டைட்டன்சுடன் ராஜஸ்தான் பலப்பரீட்சை நடத்த உள்ளது. வெற்றிக்கு பின் சஞ்சு சாம்சன் அளித்தபேட்டி, “குஜராத்திற்கு எதிரான போட்டியில் டாஸை இழந்ததே எங்களுக்கு பெரும் சிக்கலை கொடுத்தது. ஆனால் இந்த தொடர் முழுவதையும் நாங்கள் சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம், பல தோல்விகளில் இருந்து மீண்டு வந்துள்ளோம். வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். இந்த தொடரிலும் நாங்கள் சில போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஆனால் தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் தங்களது வேலையை சரியாக செய்ததால் சுழற்பந்து வீச்சாளர்களின் வேலையும் இலகுவானது. மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தியது எங்களுக்கு கை கொடுத்தது. இன்று டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியின் வெற்றி, தோல்வியிலும் டாஸின் முடிவே மிக முக்கிய பங்கு வகிக்கும். ஜோஸ் பட்லர் போன்ற மிக சிறந்த வீரர்கள் இருப்பது எங்களது பெரிய பலம். 2008 முதல் ஐபிஎல்லில் ராஜஸ்தான் பட்டம் வென்றபோது நான் 16 வயதுக்குட்பட்டோருக்கான கேரள அணியில் ஆடிக்கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் வார்னே-தன்வீர் ரன் அடித்து வெற்றிபெற்ற காட்சி என் நினைவுக்கு வந்து ஓடுகிறது, என்றார். ஆட்டநாயகன் பட்லர் கூறுகையில், டி20யின் மிகப்பெரிய தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் உற்சாகம் அளிக்கிறது. ஷேன் வார்னே ராஜஸ்தான் அணிக்கு மிகவும் செல்வாக்கு மிக்க நபராக இருந்துள்ளார். நாங்கள் அவரை மனதார மிஸ் செய்கிறோம், என்றார்.

மூலக்கதை